தமிழக அரசியலில் தவெகவை சுற்றிய கூட்டணி கணக்குகள் தொடர்ந்து மாறி வருகின்றன. குறிப்பாக, இதுவரை தவெக அரசுக்கு ஆதரவாக இருந்து வந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எதிர்காலத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தவெக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், கூட்டணி அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்க தவெக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு குறையும் பட்சத்தில், பாமகவின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் தவெக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே மதுராந்தகம் இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவை தவெக தரப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நேரடியாக தவெகவை ஆதரிக்க முடியாது என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்.
அதேநேரத்தில், அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கை பாமக தரப்பிடம் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக வெளிப்படையாக அறிவித்தது. இந்த முடிவு, எதிர்காலத்தில் தவெக - பாமக இடையே கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதற்கான ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதற்கு பாமக தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்றத்தில் பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், தங்களுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என அக்கட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசிகவுக்கு 2 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே கணக்கில் 4 எம்எல்ஏக்களை கொண்ட பாமகவுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என்பதே பாமக தரப்பின் வாதகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த கோரிக்கைக்கு தவெக தரப்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்றால், விசிகவின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாமக இருக்கும் கூட்டணியில் தாங்கள் இடம்பெற மாட்டோம் என விசிக தரப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், விசிக இடம்பெறும் கூட்டணியில் தாங்கள் இருக்க மாட்டோம் என பாமக தரப்பும் தவெகவிடம் தெளிவுப்படுத்தியுள்ளதாக தகவல்.
இதனால் இந்த இரண்டு கட்சிகளையும் ஒரே கூட்டணியில் வைத்திருப்பது தவெகவுக்கு சாத்தியமற்ற சூழலாக மாறியுள்ளது. எனவே, பாமக அல்லது விசிக என இரு கட்சிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலை தவெக தலைமையிடம் உருவாகலாம்.
அடுத்தடுத்த தேர்தல்களில் வட தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கி தவெகவுக்கு முக்கியமானதாக இருக்கலாம். குறிப்பாக எதிர்கால உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வட மாவட்டங்களில் வலுவான அடித்தளத்தை உருவாக்க தவெக முயற்சி செய்யும் பட்சத்தில், பாமகவுடனான கூட்டணி அதற்கு உதவக்கூடும்.
மறுபுறம் விசிகவின் வாக்கு வங்கியில் கணிசமான பகுதியை தவெக ஈர்த்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த கட்சியை கூட்டணியில் இருந்து விலக்குவதற்கான வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, தவெக கூட்டணியில் விசிகவுக்கு இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டால், அக்கட்சிக்கு திமுக கூட்டணிதான் முக்கியமான அரசியல் வாய்ப்பாக மாறக்கூடும். இதன் காரணமாகவே சமீபகாலமாக திமுகவை விசிக கடுமையாக விமர்சிக்காமல் இருந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எனவே, இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகமாக மாறி வருவது தெளிவாகிறது. குறிப்பாக பாமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடுத்தடுத்த நிலைப்பாடுகள் தவெக கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.