தலைமை தேர்தல் ஆணைய ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் இளைஞர்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த பணியான SIR-ல் முறைகேடுகள் நாப்பதாகவும், தகுதியுள்ள வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.
சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லியில் அமைதியாகப் போராடும் இளைஞர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், தான் அவசரநிலைக் காலத்தில் அனுபவித்த வேதனையான நினைவுகளை மீண்டும் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததற்கும் கண்டனம் தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், தமிழக அரசு பாஜகவின் நீட்சியாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார். ஜனநாயக உரிமையை பயன்படுத்தி அமைதியாக போராடும் இளைஞர்கள் மீதான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து வேறுபாடு தெரிவிப்பது குற்றமல்ல என்றும், ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துபவர்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் எந்தச் சமரசமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் நிறுவனக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும், அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.