UPSC தேர்வு: தமிழக அரசின் ஊக்கத்தொகை திட்டம்; கவுன்சிலிங் எங்கு, எப்போது?
2027 UPSC முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான தமிழ்நாடு அரசின் மதிப்பீட்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியானது. இந்நிலையில், இதன் கலந்தாய்வு அட்டவணை மற்றும் அதுசார்ந்த பிற விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
Tamil Nadu Government Latest News: 2027ஆம் ஆண்டுக்கான ஒன்றிய தேர்வாணைய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் (UPSC Prelims Exam) பயிற்சியை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத் தொகை திட்டத்திற்கு மதிப்பீட்டு தேர்வு 2026 நடத்தப்பட்டது.
இந்த மதிப்பீட்டுத் தேர்வு அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் (TNSkills) நடத்தப்பட்டது.
மதிப்பெண் பட்டியல் வெளியீடு
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் இந்த மதிப்பீட்டுத் தேர்வில் பங்கு பெற்றவர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (www.civilservicecoaching.com) வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு அட்டவணை
மேலும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் இணைவதற்கான கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.
| விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் | அக்டோபர் 14 |
| விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள் | அக்டோபர் 20 |
| முதற்கட்ட தெரிவுப் பட்டியல் வெளியீடு | அக்டோபர் 22 |
| கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள் | அக்டோபர் 25, 26, 27 |
| முதல்நிலை தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கும் நாள் | அக்டோபர் 28 |
கலந்தாய்வு குறித்த விவரங்கள்
- வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆர்வலர்களிடம் இருந்து சென்னையில் முழுநேரப் பயிற்சிக்கு 225 நபர்கள், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபர்கள்; மதுரையில் முழுநேரப் பயிற்சிக்கு 100 நபர்கள்; கோயம்புத்தூரில் முழுநேரப் பயிற்சிக்கு 100 நபர்கள் என மொத்தமாக 525 நபர்கள் தேர்வு செய்யப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெளியாகி உள்ள மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆர்வலர்களில் விண்ணப்பிக்கும் ஆர்வலர்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை (முழு நேரம், பகுதி நேரம்), கோயம்புத்தூர் (முழு நேரம்), மதுரை (முழு நேரம்) ஆகிய அனைத்து மையங்களுக்கும் கலந்தாய்வும் சென்னையிலேயே நடைபெறும்.
- சென்னை பசுமைவழிச்சாலை பகுதியில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும்.
மேலும் படிக்க | தலைமைச் செயலகத்தில் பவர் கட்... நடந்தது என்ன? - குற்றச்சாட்டும் விளக்கமும் Explained
- கலந்தாய்வில் ஆர்வலர்கள் தங்களது விருப்ப மையங்களை (சென்னை, கோவை, மதுரை) தேர்வு செய்யலாம்.
- கலந்தாய்வின்போது மூல ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு (Certificate Verification) தற்காலிக சேர்க்கை ஆணை (Provisional Allotment Order) வழங்கப்படும்.
- ஏற்கனவே, இப்பயிற்சி மையங்களில் முழுநேர மற்றும் பகுதி நேர பயிற்சி பெற்றவர்கள் இரண்டாவது முறை முழுநேர மற்றும் பகுதி நேர பயிற்சிக்கு விண்ணப்பிக்க இயலாது.
சந்தேகத்தை தீர்க்க...
மேலும், விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண், 93457 66957 என்ற வாட்ஸ்அப் எண், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!