உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! உதவித்தொகை புதிய அப்டேட்ஸ்
Uzhavar Pathukappu Card Latest Subsidy Updates : உழவர் பாதுகாப்பு அட்டை உதவித்தொகை குறித்த முழு விவரத்தையும், யாரெல்லாம் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Uzhavar Pathukappu Card Latest Subsidy Updates : தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மெரூன் நிற உழவர் பாதுகாப்பு அட்டை (Uzhavar Pathukappu Card) வைத்திருப்பவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் கல்விச் செலவு முதல் ஈமச்சடங்கு உதவித்தொகை வரை பல்வேறு நிதியுதவிகள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ள புதிய உதவித்தொகைகள், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த முழுமையான தகவல்கள் கீழே விரிவாக பார்க்கலாம்.
1. இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி:
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை வைத்துள்ள நபர் இயற்கையாக மரணமடைந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையாக ரூ.20,000/- மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையாக ரூ.2,500/- என மொத்தம் ரூ.22,500/- வழங்கப்படும். ஒருவேளை ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2,500 தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தால், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000 மட்டுமே வழங்கப்படும்.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள்: நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.30,000/- ஆகவும், ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.10,000/- ஆகவும் உயர்த்தப்பட்டு மொத்தம் ரூ.40,000/- வழங்கப்படும்.
விபத்து நிவாரணம்: விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு நிவாரணமாக ரூ.2,00,000/- மற்றும் விபத்தினால் ஏற்படும் உடல்உறுப்பு இழப்பிற்கு ரூ.1,00,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும்.
| உதவித்தொகை வகை | பயனாளிகள் / விவரம் | வழங்கப்படும் நிதி உதவி |
|---|---|---|
| இயற்கை மரண நிவாரணம் | உழவர் பாதுகாப்பு அட்டை (மெரூன்) வைத்திருப்பவர்கள் | ரூ.20,000 |
| ஈமச்சடங்கு உதவித்தொகை | உறுப்பினரின் இறுதிச் சடங்கிற்காக | ரூ.2,500 |
| நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் (இயற்கை மரணம்) | 04.08.2025-க்குப் பிறகான நிகழ்வுகளுக்கு (அரசாணை 514) | ₹40,000
(மரணம்: ரூ.30,000 + ஈமச்சடங்கு: ரூ.10,000) |
| விபத்து மரண நிவாரணம் | விபத்தினால் மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் | ரூ.2,00,000 |
| விபத்து உறுப்பிழப்பு நிவாரணம் | விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு | ரூ.1,00,000 வரை |
| தற்காலிக இயலாமை ஓய்வூதியம் | காசநோய் (TB), புற்றுநோய் (Cancer), சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு | மாதாந்திர ஓய்வூதியம் |
| சிறப்பு மாதாந்திர உதவித்தொகை | HIV தொற்றினால் இறந்தோரின் குழந்தைகளுக்கு | மாதாந்திர நிதியுதவி |
| கல்வி உதவித்தொகை | உறுப்பினர்களின் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்விக்கு | பாடத்திட்டத்திற்கு ஏற்ப |
| திருமண உதவித்தொகை | குடும்ப உறுப்பினர்களின் திருமணச் செலவிற்காக | அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை |
2. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் பிற முக்கிய நலத்திட்ட உதவிகள்:
கல்வி மற்றும் திருமண உதவித்தொகை: உறுப்பினர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் திருமணத்திற்கு நிதியுதவி.
நோய்களுக்கான ஓய்வூதியம்: காசநோய், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுத் தற்காலிக இயலாமையில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
சிறப்பு மாதாந்திர ஓய்வூதியம்: HIV தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
அசம்பாவிதம் அல்லது நிகழ்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 மாதத்திற்குள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தனிவட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களினால் காலதாமதமாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று அதிகபட்சமாக 1.5 ஆண்டுகள் வரை காலதாமதக் விலக்கு பெற்றுப் பயன்பெறலாம்.
பொதுமக்கள் தங்களின் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துச் சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் நடைபெறும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம்களில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.
4. யாரெல்லாம் விண்ணப்பித்து அட்டை பெறலாம்?
* சொந்தமாக நிலம் இல்லாமல் விவசாயக் கூலி வேலை செய்பவர்கள்.
* 2.50 ஏக்கருக்கு மிகாத நன்செய் நிலம் அல்லது 5.00 ஏக்கருக்கு மிகாத புன்செய் நிலம் வைத்து நேரடியாகச் சாகுபடி செய்பவர்கள்.
* தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் தகுதியானவர்கள்.
* 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
5. தேவையான ஆவணங்கள்:
ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நில உரிமையாளர்களாக இருந்தால் பட்டா / சிட்டா நகல்
6. உழவர் பாதுகாப்பு அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
உழவர் பாதுகாப்பு அட்டைக்கு இரு வழிகளில் விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் வழியாக அல்லது அருகில் உள்ள இ-சேவை வழியாக விண்ணப்பிக்கலாம். விஏஓ என்றால், உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரை அணுகி, உழவர் பாதுகாப்புத் திட்டப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அவர் விவரங்களை ஆய்வு செய்து பரிந்துரைத்தவுடன், வட்டாட்சியர் அலுவலகம் மூலம் உங்களுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கப்படும்.
ஆன்லைன் என்றால், உங்களுக்கு அருகிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையத்திற்குச் சென்று ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவுடன் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டைக் கொண்டு விண்ணப்ப நிலையை ஆன்லைனிலேயே அறிந்து கொள்ளலாம்.