ஆதிதிராவிடர் - பழங்குடியினருக்கு சூப்பர் செய்தி. தொழில் தொடங்க ரூ.3.50 லட்சம் வரை அரசு மானியம் தரும் வெற்றி தொழில் முனைவோர் திட்டத்தில் முக்கிய அப்டேட் வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தவும், அவர்களைச் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சமூக நீதித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான வெற்றி தொழில் முனைவோர் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சொந்தமாக வியாபாரம் அல்லது உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்கி, தங்களது வாழ்வாதாரத்தைப் பெருக்க நினைக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இத்திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
தொழில் தொடங்கும் போது ஏற்படும் நிதி நெருக்கடியைக் குறைக்கும் வகையில், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மிகக் குறைந்த வட்டியில் கடனுதவியும், பெரும்தொகை அரசு மானியமாகவும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
அரசு மானிய விவரம்: நீங்கள் தேர்வு செய்யும் தொழில் திட்டத் தொகையில் 35% வரை அரசு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெறக்கூடிய அதிகபட்ச மானிய வரம்பு ரூ.3.50 லட்சம் ஆகும்.
குறைந்த வட்டிச் சலுகை: வங்கி மூலம் பெறப்படும் தொழில் கடன்களுக்கான வட்டிச் சுமையைக் குறைக்கும் வகையில், ஆண்டிற்கு 6% வட்டி என்ற சலுகை விகிதத்தில் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் மானியம் பெற விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
சமூகம்: விண்ணப்பதாரர் கண்டிப்பாக தமிழ்நாடு அரசாலை அங்கீகரிக்கப்பட்ட ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வருமான வரம்பு: விண்ணப்பிக்கும் நபரின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.
வயது வரம்பு: சுயதொழில் தொடங்க ஆர்வமும் தகுதியும் உள்ள 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட நபர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
புதிய தொழில் திட்டங்கள் மூலம் சொந்தக் காலில் நிற்க விரும்புவோருக்கு இந்த 'வெற்றி தொழில் முனைவோர் திட்டம்' மிகப்பெரிய ஊக்கத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள், தாட்கோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ அல்லது தங்கள் மாவட்டத்திலுள்ள மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகியோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயனடையலாம்.