SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

”தவெக அரசின் சின்ன புத்தி அரசியல்" - சாடிய உதயநிதி, ஸ்டாலின்!

மத்திய - மாநில உறவுகள் தொடர்பான குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை கலைத்த தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Written By R Balaji
Published: Nov 07, 2026, 01:18 PM IST | Updated: Nov 07, 2026, 01:26 PM IST
Join

முந்தைய திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் தொடர்பான உயர்மட்டக் குழுவை தவெக அரசு கலைத்துள்ளது. இந்த குழு சட்டப்பூர்வ அமைப்பு கிடையாது என்றும், ஏற்கனவே மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுடன் இதன் செயல்பாடுகள் ஒத்துப்போவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மறுசீரமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் பணிகளும், குரியன் ஜோசப் குழுவின் பணிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசின் முடிவுக்கு திமுக எதிர்ப்பு

தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில உரிமைகள் தொடர்பான முக்கியமான ஆய்வுக் குழுவை கலைத்துவிட்டு, தியேட்டர் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆய்வு செய்வதற்காக திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்துள்ள தவெக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாகம், சட்டம் மற்றும் பொருளாதார துறைகளில் அனுபவம் பெற்ற வல்லுநர்களை கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய குழுவை கலைத்ததன் மூலம் முதலமைச்சர் விஜய் தமிழகத்தின் நலன்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், புதிய திட்டங்களை உருவாக்குவதிலும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்துவதிலும் தவெக அரசு போதிய முதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

குரியன் ஜோசப் குழு அறிக்கைக்கு கிடைத்த பாராட்டு

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் தங்களது துறைகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள் என்றும், ஆய்வு செய்ய வேண்டிய விஷயங்களில் ஆழமான அறிவு பெற்றவர்கள் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

குழுவின் முதல் அறிக்கை வெளியானபோது, அது நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மாநில உரிமைகள் தொடர்பான ஆய்வை சரியான நேரத்தில் மேற்கொண்ட முயற்சி என பல தலைவர்கள் இதனை வரவேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் இந்த அறிக்கையை பாராட்டி, அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார். குழுவின் உறுப்பினர்களின் நேர்மை மற்றும் அறிக்கையின் தரம் குறித்து குறை கூற முடியாத நிலையில், மிக சாதாரணமான காரணங்களை முன்வைத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பூர்வ அமைப்பு இல்லை என்ற அரசின் விளக்கம்

குரியன் ஜோசப் தலைமையிலான குழு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்றும், ஏற்கனவே செயல்படும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுடன் ஒத்துப்போவதாகவும் தவெக அரசு கூறியுள்ளது. ஆனால், மாநில சட்ட ஆணையமும் சட்டப்பூர்வ அமைப்பு கிடையாது என்பதை 'தி இந்து' நாளேடு சுட்டிக்காட்டியுள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும், குரியன் ஜோசப் குழுவின் அறிக்கை பாராட்டத்தக்கது என்றும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய - மாநில உறவுகள் குறித்து இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் மற்றும் பூஞ்சி ஆணையம் ஆகியவையும் சட்டப்பூர்வ அமைப்புகள் அல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநில உரிமைகள் குறித்த விவாதம் தீவிரமடையும் என்ற அச்சமா?

குரியன் ஜோசப் குழுவின் முதல் அறிக்கை பெற்ற வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமலும், அதன் அடுத்தகட்ட அறிக்கை வெளியானால் மாநில உரிமைகள் தொடர்பான விவாதம் தேசிய அளவில் மேலும் வலுப்பெறும் என்ற அச்சத்திலும் தவெக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் மாநில உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முயற்சிக்கு தவெக அரசு முடிவுகட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைகள் தொடர்பான ஆய்வு குழுவை கலைத்ததன் மூலம் தவெக அரசு தவறான அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை வரலாறு மறக்காது என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES