SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ஊழல்..? முதல்வர் விஜய் சொல்லும் பதில்!

எழுத்தாளர் பெருமாள் முருகன், ‘பெரியார் அறிவுலகம்’ எனும் பெயரில், நூலகம் கட்டி, இதில் நூல்கள் வாங்குவதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 06, 2026, 03:09 PM IST | Updated: Nov 06, 2026, 03:58 PM IST
Image Credit: Periyar Arivulagam | X Page
Join

கோவை காந்திபுரத்தில், சுமார் ரூ.300 கோடி செலவில், ‘பெரியார் அறிவுலகம்’ எனும் பெயரில், பிரமாண்ட நூலகம் கட்டும் பணிகள் தொடங்கியது. இது, திமுக ஆட்சியில் இருந்த போது நடந்தது. கடந்த மே மாதம் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த பணிகள் முடிவடைந்தன. சில வாரங்களுக்கு முன்பாக முதல்வர் விஜய் அதனை திறந்து வைத்தார்.

பெருமாள் முருகன் குற்றச்சாட்டு..!

இந்தியாவின் மிக பிரபலமான எழுத்தாளரான பெருமாள் முருகன், இந்த பெரியார் அறிவுல்கத்திற்காக வாங்கியிருக்கும் நூல்கள் வாங்கியிருப்பதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் ‘சிந்தை’ இணையதளத்தில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில்தான் இந்த குற்றச்சாட்டினை முன் வைத்தார். அதில், கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு நூல் விநியோகிப்பதற்காகவே புதிய பதிப்பகங்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், செய்யறிவு (AI) மூலமாக நூல்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, நூலசிரியர்கள் பெயர்கள் மட்டும் புதுப்பெயர்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து, ‘பன்னாட்டுத்தர புத்தக எண்ணான ISBN அனைத்தும் பொய்யானவையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

போலியான பெயர்களிலும், அரை குறையான அல்லது தவறான தகவல்களுடன் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூரும் அவர், வெறும் ரூ.300 கூட மதிப்பில்லாத புத்தகங்களை, ரூ.1,500 என விலை வைத்து விற்பனை செய்துள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது.

நாலடியார் குறித்து குறிப்பிட்ட பெருமாள் முருகன்..!

பெரியார் அறிவுலகத்தில் இருக்கும் நான்காம் தளத்தில் இருக்கும் தமிழ் நூல்களை சான்றாக கூறிய பெருமாள் முருகன், ‘அகல் விளக்கு பதிப்பகம்’வெளியிட்டிருக்கும் கிட்டத்தட்ட 1,800 நூல்கள், அலமாரிகளை அலங்கரித்திருப்பதாகவும், ஒரு சில தவிர எல்லாமே கெட்டி அட்டை போடப்பட்டவை என்றும் கூறியிருக்கிறார். தான் 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் புழங்கி வருவதாக கூறியுள்ள இவர், தனக்கு அகல்விளக்கு பதிப்பகம் எனும் ஒன்ரு அறிமுகமாகவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

நாலடியார் புத்தகம் குறித்த கேள்வி..!

’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ எனும் 300 பக்க நூலின் விலை, ரூ.1,445 மட்டும்தான் என குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு நூலின் விலையும் இப்படித்தான் இருப்பதாகவும், பிற பதிப்பகங்கள் எல்லாம் முந்நூறு பக்க நூலுக்கு முந்நூற்று ஐம்பது ரூபாய்தான் விலை வைக்கிறார்கள் என்றும் அவர்களை நையாண்டி செய்திருக்கிறார்.

அந்த நாலடியார் நூலில், “நாலடியார் தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவத் ஞானி. அத்துடன் உலகம் முழுவதும் அறியப்பட்டட் தமிழ் இலக்கியத்தின் தொலைநோக்கிய அணுகுமுறை போன்றவராக வாழ்ந்தவர். அவர் தனது பாடல்களிலும் கவிதை களிலும் மனித வாழ்க்கை யின் உண்மைகளை மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்” என தொடங்குவதாக குறிப்பிட்டுள்ள பெருமாள் முருகன், இதை வாசித்து தனக்கு தலைசுற்றி போனதாக தெரிவித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக கவியுலகில் இருக்கும் தனக்கு, நாலடியார் ஒரு கவிஞர், தத்துவஞானி என்பது தெரியவில்லையே என கூறியுள்ளார்.

பெருமாள் முருகன் முன்வைத்த கேள்வி..!

இப்படி, போலி நூல்களை விநியோகித்து, கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்கு பணம் போய் சேர்ந்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கும் அவர், இதில் ஈடுபட்ட அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

மேலும் படிக்க | மாதம் ரூ.9,000 நிதியுதவி! பிரதம மந்திரியின் இன்டர்ன்ஷிப் திட்டம் – முழு விவரம்!

அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன பதில்!

பெருமாள் முருகனின் இந்த குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்திருந்தார். அப்போது, சமீபத்தில் கோவையில் பெரியார் நூலத்தை திறந்து வைத்ததாகவும் எதிர்கட்சி திமுகனண்பர்கள் தாங்கள் தான் கட்டினோம் என கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

பெருமாள் முருகனின் கட்டுரையை படிக்கும் போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் வேதனையாகவும் இருப்பதாக கூறிய அவர், பெரியார் நூலத்தில் நடந்துள்ள இந்த ஊழல், கடந்த ஆட்சியில் திமுகவின் மெகா ஊழல் என கூறியுள்ளார்.

இது குறித்த விசாரணை துவங்குவதாக கூறிய ராஜ்மோகன், கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்தது யாரோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

முதல்வர் விஜய் கொடுத்த ரிப்ளை..!

முதல்வர் விஜய், திமுகதான் பெரியார் பெயரில் பல ஆண்டுகளாக  ஊழல் செய்வதாக, முதல்வர் விஜய் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் அமைந்த அரசாணை..!

“பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

”இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?” என்று கேட்டிருக்கிறார்.

மேலும், “தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.

மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.

பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி” என குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக சொல்வது என்ன?

இந்த குற்றச்சாட்டுகளுக்கு, திமுக தங்கள் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளது. அதில், “பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ்  பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ”அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?” என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

எந்தவித ஒளிவு மறைவும் இல்லை..!

கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர் என்று கூறிய திமுக, ”திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?” என்று கேட்டிருக்கிறது.
 

மேலும் படிக்க | தீபாவளி நாளில் வெளுத்து வாங்கப்போகும் மழை: 8 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES