25 நாட்களை கடந்தது.. செஞ்சி சிறுமி எங்கே? சிக்கும் வில்லுப்பாட்டு குழு? சிபிசிஐடி விசாரணை
Gingee Child Missing Latest Update: விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வில்லுப்பாட்டு குழுவினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Gingee Child Missing Latest Update: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல் போல வழக்கில் 25 நாட்களை கடந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 25 நாட்களாக சிறுமி காணாமல் போன சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சிறுமியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹேமலதா, வீட்டில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த போது கடந்த 12ஆம் தேதி அதிகாலை திடீரென காணாமல் போனார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்த வடிவேலு மற்றும் பவானி தம்பதியின் இரண்டாவது பெண் குழந்தையான ஹேமலதா இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தான் காணாமல் போனவர்.
சிறுமி காணாமல் போவதற்கு முந்தைய நாள் இரவு, ஹேமலதாவுக்கு குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பின்னர் அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர். மேலும், ஹேமலதாவின் தாய் தான் அவரைத் தூங்க வைத்திருக்கிறார். பின்னர் காலையில் எழுந்த தாய் பார்த்த போது சிறுமி காணாமல் போயிருந்தார். சிறுமி காணாமல் போய் இன்றோடு 25 நாட்களான நிலையில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகில் இருக்கக்கூடிய விவசாயக் கிணறுகள், வயல்வெளிகள், மலைகள் எனப் பல்வேறு இடங்களில் போலீசார் தேடியும் இதுவரை ஹேமலதாவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை
சிபிசிஐடி டிஎஸ்பிக்களான கீதா மற்றும் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் 30 பேர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள், சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர்கள், கிராம பொதுமக்கள், கோயில் பூசாரிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் காணாமல் போன சிறுமி குறித்து இதுவரை எந்தவிதமான சிறு தடயமும் கிடைக்காமல் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து திணறி வருகின்றனர்.
வில்லிப்பாட்டு குழுவினரிடம் விசாரணை
இந்த நிலையில், குழந்தை மாயமான அதே நேரத்தில் நள்ளிரவில் சிறுமியின் வீட்டின் முன்பாக சென்ற வாகனங்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்திருக்கின்றனர். இதில் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினரை சிபிசிஐடி போலீசார் நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி இருக்கின்றனர். சிறுமி மாயமான அக்டோபர் 11ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 12 மணி அதிகாலை நேரத்தில் என்னென்ன வாகனங்கள் சென்றன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், நள்ளிரவு 12.45 மணிக்கு சிறுமியின் வீட்டில் முன்பாக உள்ள மண் சாலை வழியாக டா ஏஸ் மினி வேன் மற்றும் சில இருசக்கர வாகனங்கள் சென்றுள்ளது பதிவாகியிருந்தது. அந்த வாகனங்கள் யாருடையது என்று விசாரித்தபோது, அவை பக்கத்து கிராமமான நடுப்பட்டுவைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர்களின் வாகனங்கள் என்பது தெரியவந்துள்ளது.
கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்
நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அந்த வில்லுப்பாட்டுக் குழுவினர், திருக்கோவிலூர் மற்றும் கண்டாச்சிரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில் ஒன்றில் நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பியது தெரியவந்துள்ளது. அவர்கள் ஆலம்பூண்டி குளக்கரை தெரு வழியாக நடுப்பட்டு கிராமத்திற்கு சென்ற நேரம், சரியாக சிறுமி ஹேமலதா காணாமல் போன நேரத்துடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நள்ளிரவில் அந்த சாலையை கடந்து செல்லும்போது, சந்தேகத்திற்குரிய நபர்களை பார்த்தீர்களா? குழந்தையுடன் யாராவது சென்றார்களா? காணாமல் போன சிறுமியின் வீட்டில் விளக்குகள் ஏரிந்ததா? கதவு திறந்து இருந்ததை பார்த்தீர்களா? நீங்கள் வேனில் செல்லும்நேரத்தில் வேறு ஏதேனும் வாகனத்தை பார்தீர்களா என்பது குறித்து வில்லிப்பாட்டு கலைஞர்களிடம் சிபிசிஐடி வாக்குமூலங்களை பெற்றதாக கூறப்படுகிறது.