Gingee Missing Girl Case Updates: செஞ்சியில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவை நாமக்கல் மாவட்டத்தில் பார்த்ததாக சத்துணவு அமைப்பாளர் பவானி என்ற பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க இருவர் மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் அந்த சிறுமியை பார்த்தாக பவானி தெரிவித்துள்ளார். நீங்கள் பார்த்த சிறுமி, ஹேமலதாதான என எப்படி சொல்கிறீர்கள் என செய்தியாளர் பவானியிடம் கேள்வி எழுப்பினார்.
தனது மகளின் செல்போனில் நூறு முறைக்கு மேல் அந்த செஞ்சி சிறுமியின் புகைப்படத்தை பார்த்ததாக கூறும் பவானி, தான் பார்த்த குழந்தையும் அதுவும் 90% மேட்ச் ஆனதால் மட்டுமே அவசர உதவி எண்ணுக்கு அழைத்ததாக தெரிவித்தார். தான் பார்த்தது அந்த சிறுமியைதான் என உறுதியாக தெரிவித்தார். கடந்த அக். 23ஆம் தேதி அந்த சிறுமியை பார்த்ததாக கூறும் பவானி, இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளரிடம் பவானி அளித்த பேட்டியில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அவர் சத்துணவு அமைப்பாளராக இருப்பதாக தெரிவித்தார். 10 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்ததாக தெரிவித்தார்.
காய்கறியை ஒரு சத்துணவு மையத்தில் இருந்து இன்னொரு மையத்திற்கு கொண்டுபோவது வழக்கம் என தெரிவித்த அவர், அப்படி கடந்த அக். 23ஆம் தேதி அன்று காலையில் 10.45 - 10.50 மணிக்குள், ஒரு மையத்தில் இருந்து இன்னொரு மையத்திற்கு போகும் வழியில் செஞ்சியில் காணாமல் போன சிறுமி 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பேருடனும், 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடனும் சென்றதாக தெரிவித்தார். அந்த சிறுமி அவர்களுக்கு நடுவே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அன்று பார்த்தபோது, அந்த குழந்தைதான் காணாமல் போன குழந்தை என தெரியாது என்றும் அக். 29ஆம் தேதி இரவில் தனது மகளின் மொபைலில் மாயமான சிறுமி என வீடியோவை பார்த்ததாக கூறும் அவர், அதன் பின்னரே தான் பார்த்த சிறுமிதான் அது என்பது தெரியவந்ததாக கூறினார். உடனே அவசர உதவி எண் 100-ஐ அழைத்து தகவல் சொல்லிவிட்டதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பவானியிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். நா்மக்கல்லில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியபோது, பவானியையும் அவர்கள் அழைத்துள்ளனர். சொன்ன இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா வீடியோக்களை சேமித்ததாக பவானி தெரிவித்தார்.
மேலும், விழுப்புரத்தில் இருந்து சிபிசிஐடி போலீசார் முத்துக்குமார் என்பவர் விசாரணை என்ற பெயரில் மன உளச்சலுக்கு தன்னை ஆளாக்கியதாகவும், தகவல் சொல்லியதற்காக தான் பணியாற்றும் பள்ளியிலும், பள்ளி தலைமையாசிரியரிடமும், சத்துணவு உதவியாளரிடமும் தன்னை குறித்து விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் ஏன் சிறுமி குறித்து தகவல் சொன்னேனோ என ஆகிவிட்டது என பவானி வேதனை தெரிவித்தார்.
நேற்று (நவ. 3) மதியம் தனது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் வந்து தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார். இனிமேல் வேலைக்கு போகவே தனக்கு பயமாக இருப்பதாகவும், இனி அடுத்தடுத்து என்ன நடக்கும், என்ன பிரச்னை வரும் என பீதி தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வளவு பிரச்னை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்றும் கவலையடைந்தார். எனவே, அந்த முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை பெற்றோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போய் இன்றுடன் 23 நாட்களாகிவிட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.