அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
“முதலில் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதையை முதலில் இயக்குநர் மதுமிதா என்னிடம் சொன்னபோது, கதையைப் படித்துப் பாருங்கள் என்றுதான் கூறினார். கதையைப் படித்துவிட்டு நடிக்கச் சம்மதம் தெரிவித்தேன். அதன்பிறகு இப்படத்தை ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அர்கா நிறுவனத்துடன் பணியாற்றுவது எனக்குப் பெருமையான விஷயம். எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் நடித்த நீரவ் மிகவும் அழகாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு இன்னும் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஜாராவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஸ்ருஷ்டி இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். குறிப்பாக, அவருக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் சிங்க் சவுண்ட் முறையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது கிடைக்கும் நேரங்களில் வசனங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்து, ஒரே டேக்கில் சிறப்பாகப் பேசி முடிப்பார். சஞ்சனா இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். பிரீதா மேடம் எங்களுடைய ஒளிப்பதிவாளர். எந்த இடத்திற்குச் சென்றாலும் மிகவும் இயல்பாகப் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அஷ்வினி மேடமும் அவரது குழுவினரும் படப்பிடிப்புத் தளத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு ஃபிரேமையும் சிறப்பாகக் கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். காஸ்ட்யூம் டிசைனர்களான பிரியா ஹரி மற்றும் பிரியா கரண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே தங்களுக்குள் புரிந்துகொண்டு பணியாற்றுவார்கள். அவர்களுடைய ஒருங்கிணைப்பு மிகவும் ஆச்சரியமானது. அதேபோல் அனு மேடம், அதுல் கிருஷ்ணா, ராஜேஷ், உதவி இயக்குநர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் அதிகம் பேசமாட்டார். ஆனால், அவருடைய பணி படத்தை மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா (Shobu Yarlagadda), பிரசாத் தேவினேனி (Prasad Devineni) ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் (Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, அர்ஜுன் தாஸின் வித்தியாசமான கதாபாத்திரம், மதுமிதாவின் இயக்கம் எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.