தமிழகத்தில் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’, 2027-ஆம் ஆண்டு முதல் புதிய பொலிவுடன் மெகா மாற்றங்களைச் சந்திக்கவுள்ளது. இதற்கான ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வழிகாட்டுதல்கள், 2027’ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை மட்டுமே கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இப்புதிய வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் வரப்பிரசாத நன்மைகள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ:
இதுவரை இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்து வந்தது. இதனால் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் பலருக்கு இத்திட்டத்தின் பலன் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகக் குடும்ப அட்டை அல்லது தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பெயர் உள்ள, ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பங்கள் இனி இத்திட்டத்தின் கீழ் தானாகவே தகுதி பெறுவர்.
இச்சலுகையைப் பெற ரேஷன் அட்டை, கிராம நிர்வாக அலுவலர் அல்லது இணையவழி வருவாய்த்துறை அளித்த வருமானச் சான்றிதழ் மற்றும் குடும்பத் தலைவரின் சுய உறுதிமொழி ஆகியவற்றைச் சமர்ப்பித்தால் போதுமானது.
இத்தகுதியுள்ள குடும்பங்களுக்கான முழு பிரீமியம் தொகையையும் தமிழக அரசே முழுமையாக ஏற்கும்.
இதுவரை ஒரு குடும்பத்திற்கு ஒரு பாலிசி ஆண்டில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மட்டுமே சிகிச்சை உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது வரலாறு காணாத வகையில் ரூ.25 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவி பொதுமக்களுக்கு இரண்டு வழிமுறைகளில் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது:
ரூ.5 லட்சம் வரை: ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான செலவுகளை ஒப்பந்தம் செய்யப்படும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் பணமில்லா முறையில் நேரடியாக ஏற்கும்.
ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.25 லட்சம் வரை: ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.25 லட்சம் வரையிலான கூடுதல் சிகிச்சைக் கோரிக்கைகளை, இன்சூரன்ஸ் நிறுவனமே பரிசீலித்து நடைமுறைப்படுத்தும். ஆனால் இதற்கான நிதியை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது சுமத்தாமல், தமிழக அரசின் பிரத்யேக ‘Corpus Fund’ மூலம் அரசு முழுமையாக ஈடுகட்டி வழங்கும். இதற்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அரசு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பயனாளிகளிடம் இருந்து எந்தவிதக் கூடுதல் கட்டணத்தையும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமோ அல்லது மருத்துவமனைகளோ வசூலிக்கக் கூடாது என்று அரசாணை மிகக் கடுமையான நிபந்தனையை விதித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு முழுமையான பணமில்லா முறையில் மட்டுமே சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
மேலும், திட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவப் பேக்கேஜ்களும் அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் முழுமையாகத் திறந்துவிடப்பட்டு செயல்படுத்தப்படும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது முதல் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் வரை ஆகும் அனைத்துச் செலவுகளையும் இத்திட்டத்தின் கீழ் முழுமையாகப் பெறலாம்:
படுக்கை மற்றும் பராமரிப்பு கட்டணங்கள்: பொது வார்டு படுக்கைக் கட்டணம், தீவிர சிகிச்சைப் பிரிவு, செவிலியர் மற்றும் தங்குமிடக் கட்டணங்கள்.
மருத்துவர் கட்டணங்கள்: அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், மருத்துவர்கள் மற்றும் சிறப்பு ஆலோசகர்களின் கட்டணங்கள்.
மருந்து மற்றும் அறுவை அரங்கச் செலவுகள்: மயக்க மருந்து, ரத்தம், ஆக்சிஜன், ஆபரேஷன் தியேட்டர் (O.T.) கட்டணங்கள், அறுவை சிகிச்சைக் கருவிகள் மற்றும் மருந்துகள்.
உபகரணங்கள் மற்றும் பரிசோதனைகள்: செயற்கை உறுப்புகள், பொருத்தப்படும் இம்ப்ளான்ட்டுகள், நுகர்பொருட்கள், எக்ஸ்-ரே மற்றும் நவீன நோய் கண்டறியும் பரிசோதனைகள்.
உணவு மற்றும் போக்குவரத்து: உள்நோயாளிகளுக்கான உணவு மற்றும் பொதுப் போக்குவரத்துக் கட்டணம், டிஸ்சார்ஜ்க்குப் பிந்தைய தொடர் சிகிச்சைக்கான மருந்துகள் வரை அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாகவே வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 1286 வகையான அதிநவீன அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளும், 48 வகையான சிறப்பு நோய் கண்டறியும் பரிசோதனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் எனப் பல லட்சம் ரூபாய் செலவாகும் பெரு சிகிச்சைகள் அனைத்தும் இனி எளிய மக்களுக்கும் எட்டக்கூடிய தூரத்தில் இருக்கும். எதிர்காலத்தில் புதிதாகச் சேர்க்கப்படும் சிகிச்சைகள் உறுதியளிப்பு முறையில் இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது TPA மூலம் ஈடுசெய்யப்பட்டு தொடரும்.
2027 ஜனவரி 11 முதல் தொடங்கவுள்ள இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வருகின்றன. நடுத்தரக் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் வருமான வரம்பும், சிகிச்சைத் தொகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.