SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீபாவளி பலகாரம் விற்பவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிரடி கட்டுப்பாடுகள்!

Tamil Nadu Food Safety Rules for Diwali Sweets: தீபாவளி பண்டிகைக் கால இனிப்பு, காரம் விற்பனைக்கு FSSAI உரிமம் கட்டாயம் எனவும், விதிமீறினால் கடும் நடவடிக்கை என திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 19, 2026, 09:25 AM IST | Updated: Oct 19, 2026, 09:30 AM IST
Join

Tamil Nadu Food Safety Rules for Diwali Sweets: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் பேக்கரிப் பொருட்களை விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதும் வழக்கம். இதனைப் பயன்படுத்தி தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், திருச்சி மாவட்டத்தில் இனிப்பு, காரம் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.  

1. FSSAI உரிமம், பதிவு பெறுவது கட்டாயம்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளுக்குச் சீட்டு நடத்துபவர்கள், தற்காலிகமாகப் பலகாரம் தயாரிப்பவர்கள் மற்றும் நிரந்தரக் கடை உரிமையாளர்கள் என அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையில் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.  

வணிகர்கள் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது நிறுவனத்தைப் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்.  

ஆண்டிற்கு ரூ. 12 லட்சத்திற்குள் விற்பனை செய்யும் சிறு வணிகர்கள் மற்றும் தற்காலிகத் தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த கட்டணமான ரூ. 100 செலுத்தி எளிய முறையில் பதிவுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிரந்தர இனிப்பு, காரக் கடைகள் மற்றும் பேக்கரி வைத்திருப்பவர்கள் கட்டாயம் சுகாதாரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.  

2. தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான முக்கிய விதிமுறைகள்:

பலகாரங்களைத் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, சுகாதாரமான சூழலில் மட்டுமே தயாரிக்க வேண்டும்.  

எண்ணெயில் பொரிக்கும் பலகாரங்களில் செயற்கை நிறமிகளையோ, தரமற்ற மூலப்பொருட்களையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. பேக்கரி மற்றும் இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான உணவு நிறமிகளை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

பயன்படுத்திய எண்ணெய் மறுபயன்பாட்டிற்குத் தடை (RUCO திட்டம்): ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, மத்திய அரசின் RUCO (Repurpose Used Cooking Oil) வழிகாட்டுதலின்படி பயோடீசல் தயாரிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் வழங்கி அதற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற வேண்டும்.  

பாக்கெட்டுகளுக்கான விபரச்சீட்டு: பாக்கெட் செய்யப்பட்டு அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு/பேக்கிங் தேதி, காலாவதியாகும் காலம், பேட்ச் குறியீடு, FSSAI உரிமம்/பதிவு எண் மற்றும் சைவ/அசைவ குறியீடு ஆகியவை தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித்தொற்று இல்லாத பாதுகாப்பான, சுகாதாரமான இடங்களில் வைத்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

3. நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைகள்:

உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிய உரிமம் பெற்ற கடைகள் மற்றும் நிறுவனங்களில் மட்டுமே பலகாரங்களை வாங்க வேண்டும்.

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை வாங்கும் போது அதன் லேபிளில் காலாவதி தேதி, தயாரிப்பு விவரம் மற்றும் FSSAI எண் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.  

அதீத அடர் நிறங்கள் மற்றும் செயற்கையான பளபளப்பு கொண்ட இனிப்புகளைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. பலகாரங்களில் பழைய அல்லது கருகிய எண்ணெயின் காரல் வாசனை வந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

4. விதிமீறினால் கடும் நடவடிக்கை: 

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் உரிமமின்றி வணிகம் செய்தாலோ, தரம் குறைந்த அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கை நிறமிகள் மற்றும் மறுசுழற்சி எண்ணெயைப் பயன்படுத்தினாலோ விற்பனையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

5. பொதுமக்கள் புகார் அளிக்கும் வழிகள்:

உணவுப் பொருட்களின் தரம், சுகாதாரம் அல்லது கலப்படம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிகளில் உணவு பாதுகாப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம்:   
வாட்ஸ்ஆப் எண்: 94440 42322   
மின்னஞ்சல் முகவரி: unavupukar@gmail.com   
மொபைல் செயலி: கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் TN Food Safety Consumer App அல்லது Food Safety Connect செயலி   
இணையதளம்: https://foscos.fssai.gov.in (Consumer Grievances பகுதி)  
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES