ஆம்னி பேருந்து மீது மோதிய கார்: தம்பதி உள்பட 4 பேர் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியபோது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உயிரிழந்தவர்கள் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடித்த பின்னர் அவர்கள் காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியுள்ளது.
அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் காரி இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் காளீஸ்வரன், பிரபாகரன், கார்த்தி மற்றும் அவரது மனைவி சூர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருமணத்தை முடித்துவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு திரும்பியபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடியை சேர்ந்த ராஜசீலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து எவ்வாறு நிகழ்ந்தது. கார் ஆம்னி பேருந்தின் மீது மோதியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.
திருமண நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.