SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க கூடுதல் கால அவகாசம்: திருச்சி முக்கிய அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ்களில் குழந்தைகளின் பெயரை சேர்ப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Aug 16, 2026, 04:44 PM IST | Updated: Aug 16, 2026, 04:51 PM IST
Join

பிறப்பு சான்றிதழ்களில் குழந்தையின் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டவர்கள், தங்களின் பெயரைப் பதிவு செய்து முழுமையான சான்றிதழைப் பெறுவதற்கு அரசு மீண்டும் கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளதாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான மற்றும் செல்லுபடியாகும் ஆவணமாகக் கருதப்படும்.

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், புதிய ஆதார் அட்டை பெறுதல், பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுதல், வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெறுதல் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனிநபர் தேவைகளுக்கும், வயது குறித்த அதிகாரப்பூர்வ ஆதாரத்திற்கும் பெயர் பதிவிடப்பட்ட பிறப்பு சான்றிதழ் மிக அவசியமானதாகும்.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னணி:

திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி, 01.01.2000-க்கு முன்பு அல்லது 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் வரையிலான குழந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புப் பதிவுகளில் பெயரைச் சேர்க்க 31.12.2014 வரை முதலில் அரசு அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து தலா 5 ஆண்டுகள் வீதம் இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டு, 31.12.2019 மற்றும் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிவடைந்த நிலையில், பெயர் பதிவு செய்யாமல் இன்னும் விடுபட்டுள்ள பொதுமக்களின் நலன் கருதி, விடுபட்ட அனைத்து பிறப்புப் பதிவுகளிலும் குழந்தையின் பெயரைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் தற்போது 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எங்கு விண்ணப்பித்து பதிவு செய்வது?

குழந்தை பிறந்த இடத்தின் அடிப்படையில் பொதுமக்கள் கீழ்க்கண்ட இடங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விடுபட்ட பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். அதாவது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்

பிறப்பு பதிவேடுகளில் குழந்தையின் பெயர் விடுபட்டுள்ள பொதுமக்கள், தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி உடனடியாக தங்கள் பகுதிக்குட்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி குழந்தையின் பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES