SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

குடற்புழு நீக்க மாத்திரைகளை குழந்தைகள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? அரசு விளக்கம்

குடற்புழு நீக்க மாத்திரைகள் குழந்தைகள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? என தமிழ்நாடு அரசின் கொடுத்துள்ள விளக்கம் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்

Written By Karthikeyan Sekar
Published: Aug 11, 2026, 02:29 PM IST | Updated: Aug 11, 2026, 02:38 PM IST
Join

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனை உறுதி செய்வதில் குடற்புழு நீக்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தேசிய குடற்புழு நீக்க தினத்தை (National Deworming Day) முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் மற்றும் இளம் பெண்களுக்கும் அல்பண்டசோல் மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

குழந்தைகள் குடற்புழு நீக்க மாத்திரைகளை ஏன் உட்கொள்ள வேண்டும்?

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் குடற்புழு நீக்க மாத்திரைகள் முதன்மையான பயன்பாட்டைக் கொண்டுள்ளன. குழந்தைகள் தினசரி உட்கொள்ளும் உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அவர்களின் உடலுக்கு முழுமையாகச் சென்று சேர்வதைக் குடலில் உள்ள புழுக்கள் தடுத்து விடுகின்றன.

இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க: உணவில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உடலுக்கு முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது.

இரத்தசோகையைத் தடுக்க: குடற்புழுக்களால் ஏற்படும் இரத்தக்கசிவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் வரும் இரத்தசோகை (Anemia) பாதிப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது.

வளர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு: குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, அவர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

அறிவுத்திறன் மேம்பாடு: உடலின் சீரான வளர்ச்சியோடு சேர்த்து, குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தவும் இது துணைபுரிகிறது.

எங்கு கிடைக்கும்? விடுபட்டவர்களுக்குச் சிறப்பு முகாம்:

இந்தத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்) உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இலவசமாக அல்பண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இத்திட்டம் மூலம் 3.69 லட்சம் குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 85,733 பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முகாம் நாளில் மாத்திரை சாப்பிட விடுபட்ட குழந்தைகளுக்கு 17.08.2026 (திங்கள்கிழமை) அன்று 'Mop-up day' மூலம் தவறாமல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைந்து செயல்படும் துறைகள்:

இப்பணிகளைச் சிறப்பான முறையில் கொண்டு சேர்க்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, உயர் கல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகிய பல துறைகளைச் சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

குடற்புழு தொற்று தடுப்பு உறுதிமொழி:

நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் தலைமையில், "சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்போம், கழிப்பறையை முறையாகப் பயன்படுத்துவோம், சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளைச் சோப்பால் கழுவுவோம், திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்ப்போம்" என்ற தேசிய குடற்புழு தொற்று தடுப்பு உறுதிமொழியை மருத்துவ அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

குடற்புழு இல்லாத சமுதாயத்தையும், இரத்தசோகை இல்லாத தமிழ்நாட்டையும் உருவாக்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இம்மாத்திரைகளைக் கட்டாயம் வழங்கி, அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES