SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

FD போடும் முன் இத தெரிஞ்சுக்கோங்க! FD Laddering என்றால் என்ன? நன்மைகள் என்னென்ன? Explained

நமது மொத்த சேமிப்பையும் ஒரே ஃபிக்ஸட் டெபாசிட்டில் முடக்காமல், பணப்புழக்கத்தையும் வட்டி லாபத்தையும் தரும் எஃப்டி லேடரிங் (FD Laddering) முதலீட்டு உத்தி என்றால் என்ன, அதன் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Oct 25, 2026, 04:18 PM IST | Updated: Oct 25, 2026, 04:25 PM IST
Join

தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க, பலரும் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தை தேர்வு செய்கின்றனர். இதில் குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் செலுத்தி, அதற்கு வட்டி பெறலாம். முதலீடு செய்த பணத்திற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும் என்பதால் பலரும் FD திட்டத்தை விரும்புகின்றனர்.

ஆனால், ஒருவரிடம் இருக்கும் மொத்த பணத்தையும் ஒரே FD-யில் முதலீடு செய்வது சரியான முடிவாக இருக்குமா? இடையில் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது? FD முடிவடையும் நேரத்தில் வட்டி விகிதம் குறைந்திருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற கேள்விகளுக்கு உதவும் ஒரு முறையே FD Laddering.

FD Laddering என்றால் என்ன?

FD Laddering என்பது உங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் ஒரே FD-யில் போடாமல், சிறிய தொகைகளாக பிரித்து வெவ்வேறு கால அளவுகளில் முதலீடு செய்வதாகும்.

உதாரணமாக, உங்களிடம் ரூ. 5 இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த பணத்தை ஒரே 5 ஆண்டு FD-யில் போடுவதற்கு பதிலாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 5 FD-களாக பிரிக்கலாம். அதாவது, ஒரு FDயை 1 ஆண்டு காலத்திற்கும், மேறொன்றை 2 ஆண்டுகளுக்கும், அடுத்தடுத்த FD-களை 3, 4 மற்றும் 5 ஆண்டுகளுக்கும் முதலீடு செய்யலாம்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு FD முடிவடையும். அப்போது கிடைக்கும் பணத்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம் அல்லது மீண்டும் FD-யில் முதலீடு செய்யலாம்.

ரூ. 5 லட்சத்தை எப்படி 5 FD-களாக பிரிப்பது? 
 

FD முதலீடுகால அளவு
ரூ. 1 லட்சம்1 ஆண்டு 
ரூ. 1 லட்சம்2 ஆண்டுகள்
ரூ. 1 லட்சம்3 ஆண்டுகள்
ரூ. 1 லட்சம்4 ஆண்டுகள்
ரூ. 1 லட்சம்5 ஆண்டுகள்
மொத்தம் ரூ. 5 லட்சம்5 FD-கள்

இந்த முறையில் முதல் ஆண்டின் முடிவில் ஒரு FD முடிவடையும். அதில் முதலீடு செய்த பணத்துடன் சேர்த்து வட்டியும் கிடைக்கும்.

அந்தப் பணம் உங்களுக்கு தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால், அப்போதைய வட்டி விகிதத்தை பார்த்து மீண்டும் FD-யில் முதலீடு செய்யலாம். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதேபோல் பணம் கிடைக்கும். இதனால் மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

FD Laddering முறையில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

1. பணம் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்

உங்களிடம் இருக்கும் மொத்தப் பணத்தையும் 5 ஆண்டு FD-யில் முதலீடு செய்தால், அதற்கு முன்பாக பணம் தேவைப்படும்போது FD-யை முன்கூட்டியே முடிக்க வேண்டியிருக்கலாம். அப்போது வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப அபராதம் அல்லது வட்டி இழப்பு ஏற்படலாம். ஆனால், வெவ்வேறு கால அளவுகளில் FD செய்திருந்தால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு FD முடிவடையும். அந்த பணத்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. அவசரத் தேவைகளுக்கு கடன் வாங்குவதை தவிர்க்கலாம்

திடீரென மருத்துவ செலவு, வீட்டு செலவு அல்லது குழந்தைகளின் கல்விக்காக பணம் தேவைப்படலாம். அந்த நேரத்தில் FD முடிவடைந்து பணம் கிடைத்தால், அந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் குறையலாம். இருப்பினும், அவசர தேவைகளுக்காக தனியாக பணத்தை சேமித்து வைத்திருப்பதும் அவசியம்.

3. வட்டி விகிதம் மாறினாலும் பயன் பெறலாம்

வங்கிகளில் FD-க்கான வட்டி விகிதம் அவ்வப்போது மாறும். நீங்கள் FD செய்த பிறகு வட்டி விகிதம் உயர்ந்தால், ஏற்கெனவே முதலீடு செய்த FD-க்கு பொதுவாக முன்பே நிர்ணயிக்கப்பட்ட வட்டியே கிடைக்கும். ஆனால், FD முடிவடைந்த பிறகு அந்த பணத்தை புதிய FD-யில் முதலீடு செய்யும்போது அதிக வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேபோல், வட்டி விகிதம் குறைந்தாலும், ஏற்கெனவே அதிக வட்டியில் தொடங்கிய FD-கள் அவற்றின் விதிமுறைகளுக்கு ஏற்ப முதிர்வு வரை அதே வட்டியை வழங்கும். ஆனால், இந்த முறையில் எப்போதும் அதிக வட்டி கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது.

4. ஓய்வுக்காலத்தில் பணத்தை திட்டமிட்டு பயன்படுத்தலாம்

ஓய்வுபெற்றவர்களுக்கு மாதந்தோறும் வீட்டு செலவு, மருத்துவ செலவு உள்ளிட்ட தேவைகள் இருக்கும். இவர்கள் தங்களுக்கு பணம் தேவைப்படும் காலத்தை கணக்கிட்டு FD-களை அமைத்துக்கொள்ளலாம். இதனால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் FD முடிவடைந்து பணம் கிடைக்கும்படி திட்டமிட முடியும். ஆனால், FD Laddering முறையில் தானாகவே மாதந்தோறும் வருமானம் கிடைக்காது. அதற்கேற்ப தனியாக திட்டமிட வேண்டும்.

5. பெரிய செலவுகளுக்காக சேமிக்கலாம்

எதிர்காலத்தில் கார் வாங்குவது, வீட்டை புதுப்பிப்பது அல்லது குழந்தைகளின் கல்விக்காகப் பணம் செலவிடுவது போன்ற திட்டங்கள் இருக்கலாம். எந்த ஆண்டில் பணம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கேற்ப FD-களை அமைக்கலாம். இதனால் பணம் தேவைப்படும் நேரத்தில் முதலீட்டு தொகையை பெற உதவும்.

FD Laddering முறையில் கவனிக்க வேண்டியவை என்ன?

FD Laddering-ல் பல நன்மைகள் இருந்தாலும், முதலீடு செய்வதற்கு முன்பு சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

வட்டி விகிதம்: வெவ்வேறு கால அளவுகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டியை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

முன்கூட்டியே பணம் எடுப்பது: FD முடிவதற்கு முன்பே பணத்தை எடுத்தால், வங்கியின் விதிமுறைகளின்படி அபராதம் அல்லது வட்டி இழப்பு ஏற்படலாம்.

வருமான வரி: FD மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படலாம்.

மீண்டும் முதலீடு செய்வது: FD முடிவடைந்த பிறகு கிடைக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

அவசரகால சேமிப்பு: உங்களிடம் இருக்கும் பணம் முழுவதையும் FD-யில் போடாமல், உடனடியாக தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய தொகையையும் தனியாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், இந்தியாவில் DICGC வைப்புத்தொகை காப்பீட்டின் கீழ், ஒரே வங்கியில் ஒரே உரிமை மற்றும் ஒரே திறனில் வைத்திருக்கும் தகுதியுள்ள வைப்புத்தொகைகளுக்கு அசல் மற்றும் வட்டி சேர்த்து அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். எனவே, முதலீடு செய்யும் வங்கியையும் கவனமாக தேர்வு செய்வது முக்கியம்.

யாருக்கு FD Laddering திட்டம் பயனுள்ளதாக இருக்கும்?

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பணம் தேவைப்படுபவர்கள், நீண்ட காலத்திற்கு மொத்த பணத்தையும் ஒரே இடத்தில் முடக்க விரும்பாதவர்கள், ஓய்வுக்கால செலவுகளை திட்டமிடுபவர்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், FD Laddering என்பது அதிக லாபம் கிடைப்பதற்கான உத்தரவாதம் அல்ல. பணத்தை வெவ்வேறு கால அளவுகளில் முதலீடு செய்து, தேவையான நேரத்தில் பயன்படுத்த உதவும் ஒரு திட்டமிடல் முறை மட்டுமே. எனவே, உங்கள் தேவைகள், முதலீட்டு காலம், வட்டி விகிதம் மற்றும் வரி ஆகியவற்றை கருத்தில் கொண்டு FD-களை தேர்வு செய்ய வேண்டும். பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரின் ஆலோசனையை பெறுவதும் பயனுள்ளதாக இருக்கும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES