ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: மொபைல் போன் மூலம் நொடிகளில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?
Life Certificate: ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். 2026-ஆம் ஆண்டிற்கான சமர்ப்பிப்பு தேதிகள், ஓய்வூதியதாரரின் வயதிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Life Certificate: மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. இனி ஆண்டுதோறும் 'வாழ்நாள் சான்றிதழை' சமர்ப்பிக்க வங்கி அல்லது ஓய்வூதிய அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. அரசின் 'ஜீவன் பிரமான்' (Jeevan Pramaan) வசதியைப் பயன்படுத்தி, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மூலம் 'முக அங்கீகார' (face authentication) முறையைப் பின்பற்றி, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம்.
ஆயுள் சான்றிதழை எப்போது சமர்ப்பிக்க வேண்டும்?
ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். 2026-ஆம் ஆண்டிற்கான சமர்ப்பிப்பு தேதிகள், ஓய்வூதியதாரரின் வயதிற்கு ஏற்ப பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
- ஜீவன் பிரமான் என்றும், வாழ்நாள் சான்றிதழ் என்றும் அழைக்கப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை (DLC) சமர்ப்பிக்க, வயது அடிப்படையில் குறிப்பிட்ட காலக்கெடுவை அரசு நிர்ணயித்துள்ளது.
- 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள்: இவர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் செயல்முறை அக்டோபர் 1, 2026 அன்று தொடங்கியது.
- 80 வயதிற்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள்: இவர்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30, 2026-க்குள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் வயது பிரிவிற்குரிய தேதிகளைக் கவனத்தில் கொண்டு, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படாமலும், ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல்கள் உருவாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை உருவாக்குவதற்கான வழிமுறைகள்
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை (Digital Life Certificate) உருவாக்க, ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்த பிறகு, முக அங்கீகார முறையைப் பயன்படுத்தி சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவு செய்யலாம். அதற்கான செயல்முறையை இங்கே காணலாம்:
ஸ்டெப் 1: தேவையான செயலிகளைப் பதிவிறக்கவும்
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து (Apple App Store) 'ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆப்' (Jeevan Pramaan Face App) மற்றும் 'ஆதார் ஃபேஸ் ஆர்.டி' (AadhaarFaceRD) ஆகிய செயலிகளைப் பதிவிறக்கவும். அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2: ஆபரேட்டர் அங்கீகாரத்தை (Operator Authentication) நிறைவு செய்யவும்
'ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆப்'-ஐத் திறந்து, திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஆரம்பகட்ட சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவு செய்யவும்.
ஸ்டெப் 3: ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை உள்ளிடவும்
ஓய்வூதியதாரரின் ஆதார் எண், ஓய்வூதிய கட்டண ஆணை எண் (PPO number), மொபைல் எண் மற்றும் வங்கி அல்லது ஓய்வூதியம் தொடர்பான பிற தேவையான விவரங்களை உள்ளிடவும்.
ஸ்டெப் 4: முக அங்கீகாரத்தைச் (Face Authentication) செய்யவும்
உங்கள் ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவைப் பயன்படுத்தி முக அங்கீகாரச் செயல்முறையை நிறைவு செய்யவும். செயலியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து, தேவையான தகவல்களைச் சரிபார்க்கவும்.
ஸ்டெப் 5: சான்றிதழை உருவாக்குதல்
அனைத்துத் தகவல்களும் சரியாக இருப்பதை உறுதிசெய்த பிறகு, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், 'டிஜிட்டல் உயிர்ச் சான்றிதழ்' (Digital Life Certificate) உருவாக்கப்படும். அப்போது உங்களுக்கு ஒரு தனித்துவமான 'பிரமான் ஐடி' (Praman ID) வழங்கப்படும். இந்த ஐடியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: EPS ஓய்வூதியத்தில் மிகப்பெரிய மாற்றம்.. கணக்கீடு இதோ
சான்றிதழை உருவாக்குவதற்கு முன், பின்வரும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்:
- ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி (VID)
- பென்ஷன் கட்டண ஆணை (PPO) எண்
- செயலில் உள்ள மொபைல் எண்
- உங்கள் வங்கி கணக்கு மற்றும் பென்ஷன் தொடர்பான விவரங்கள்
- பென்ஷனை அனுமதித்த துறை மற்றும் பென்ஷனை வழங்கும் நிறுவனம் குறித்த தகவல்கள்
சான்றிதழ் உருவாக்கப்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?
வெற்றிகரமான சரிபார்ப்பிற்குப் பிறகு பெறப்பட்ட 'பிரமான் ஐடி'-யைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஐடியைப் பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ 'ஜீவன் பிரமான்' (Jeevan Pramaan) இணையதளத்திலிருந்து உங்கள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இந்தச் சான்றிதழ் பென்ஷன் வழங்கும் நிறுவனத்தைச் சென்றடைந்துள்ளதா என்பதையும், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்களா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்படுவது மட்டுமே, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் எனப்படும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றாக அமைகிறது. இதுமட்டுமின்றி, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படுவதற்கும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும்.
மேலும் படிக்க | நிதிச் சந்தைகளில் AI புரட்சி: முதலீட்டின் எதிர்காலத்தை மாற்றும் செயற்கை நுண்ணறிவு