விவசாயிகள் இந்திய நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். அவர்களின் கடின உழைப்பு நாடு முழுவதும் இருக்கும் மக்களின் பசியை போக்குகிறது. அதோடு இந்திய பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பறியது. அவர்கள் ஒரு தூணாக விளங்கி வருகின்றன. இருப்பினும் அவர்களில் பெரும்பாலோரின் பொருளாதார நிலை கவலைகிடமாகவே உள்ளது. விதை விதைத்தல் முதல் அறுவடை வரை உரம், பூச்சிக்கொல்லி, நீர்ப்பாசனம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக அவர்களுக்கு பணத் தேவை உள்ளது.
பண வசதி இல்லாத காரணத்தினால், விவசாயிகள் பலர் வட்டிக்கடைக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பின்னர் அதனை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே மத்திய அரசு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
விவசாயிகளின் அவசர பணத் தேவைகளை சரி செய்வதற்காகவே கடந்த 1998 ஆம் ஆண்டில் மத்திய அரசு இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை தொடங்கி வைத்தது.
கிட்டத்தட்ட அனைத்து விதமான விவசாயிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் இணைவதற்கு சிறப்பு வயது வரம்புகள் எதுவும் இல்லை. 75 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
ரூ.1.60 லட்சம் வரை பிணையற்ற கடன்: கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1.60 லட்சம் வரையிலான கடனுக்கு எவ்வித நிலப் பத்திரமோ அல்லது பிணையமோ தர வேண்டிய அவசியமில்லை.
PM-KISAN உடன் இணைப்பு: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மிக எளிமையான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து, விரைவாக KCC கார்டை பெற்றுக்கொள்ள முடியும்.
காப்பீட்டு வசதி: கிசான் கிரெடிட் கார்டு வைத்துள்ள விவசாயிகளுக்கு குறைந்த பிரீமியத்தில் பயிர்க் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது கிராமப்புற வங்கிகள் மூலமாக விவசாயிகள் இத்திட்டத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.