விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்.. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா?
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெற்று, விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்களுக்கான பணத் தேவைகளை எளிதாக சமாளிக்க முடியும்.
விவசாயிகள் இந்திய நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். அவர்களின் கடின உழைப்பு நாடு முழுவதும் இருக்கும் மக்களின் பசியை போக்குகிறது. அதோடு இந்திய பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பறியது. அவர்கள் ஒரு தூணாக விளங்கி வருகின்றன. இருப்பினும் அவர்களில் பெரும்பாலோரின் பொருளாதார நிலை கவலைகிடமாகவே உள்ளது. விதை விதைத்தல் முதல் அறுவடை வரை உரம், பூச்சிக்கொல்லி, நீர்ப்பாசனம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக அவர்களுக்கு பணத் தேவை உள்ளது.
பண வசதி இல்லாத காரணத்தினால், விவசாயிகள் பலர் வட்டிக்கடைக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பின்னர் அதனை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே மத்திய அரசு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
கிசான் கிரெடிங் கார்டு திட்டம்
விவசாயிகளின் அவசர பணத் தேவைகளை சரி செய்வதற்காகவே கடந்த 1998 ஆம் ஆண்டில் மத்திய அரசு இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை தொடங்கி வைத்தது.
- இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குக் கடன் அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகள் தேவைப்படும்போது பணத்தை எடுத்துப் பயன்படுத்திவிட்டு, விளைபொருட்களை விற்பனை செய்த பிறகு கடனை திரும்ப செலுத்தலாம்.
- இது வெறும் பயிர் சாகுபடிக்கு மட்டுமன்றி, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மீன்வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த பிற தொழில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறைந்த வட்டியில் கடன்
- பொதுவான வங்கி கடன்களை விட இதன் அடிப்படை வட்டி விகிதம் ஆண்டுக்கு 7 சதவீதம் மட்டுமே.
- மத்திய அரசின் 'மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்தின்' கீழ், கடனை சரியான நேரத்தில் தவறாமல் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3% வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- இதன் மூலம் விவசாயிகளுக்கு இறுதி வட்டி விகிதம் வெறும் 4 சதவீதமாக குறைகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கிட்டத்தட்ட அனைத்து விதமான விவசாயிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- சொந்த நிலம் உள்ள விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களைச் சமர்ப்பித்து நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
- சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகள் 'கூட்டுப் பொறுப்புக் குழு' (Joint Liability Group - JLG) அல்லது 'சுய உதவிக் குழு' (SHG) மூலம் விண்ணப்பித்து இச்சலுகையைப் பெறலாம்.
- மேலும், மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு
இத்திட்டத்தில் இணைவதற்கு சிறப்பு வயது வரம்புகள் எதுவும் இல்லை. 75 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
கிசான் கிரெடிட் கார்டின் கூடுதல் அம்சங்கள் மற்றும் நன்மைகள்
ரூ.1.60 லட்சம் வரை பிணையற்ற கடன்: கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1.60 லட்சம் வரையிலான கடனுக்கு எவ்வித நிலப் பத்திரமோ அல்லது பிணையமோ தர வேண்டிய அவசியமில்லை.
PM-KISAN உடன் இணைப்பு: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மிக எளிமையான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து, விரைவாக KCC கார்டை பெற்றுக்கொள்ள முடியும்.
காப்பீட்டு வசதி: கிசான் கிரெடிட் கார்டு வைத்துள்ள விவசாயிகளுக்கு குறைந்த பிரீமியத்தில் பயிர்க் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது கிராமப்புற வங்கிகள் மூலமாக விவசாயிகள் இத்திட்டத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.