SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

PM Kisan Update : தமிழக விவசாயிகள் விவசாய அடையாள எண் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட் Explained

PM Kisan Update Latest Update: பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளி ஆவதற்கும், பயிர் காப்பீடு பெறுவதற்கும் தமிழக விவசாயிகள் கட்டாயம் விவசாய அடையாள எண் பெற வேண்டும். இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 28, 2026, 11:18 AM IST | Updated: Oct 28, 2026, 11:22 AM IST
Join

PM Kisan Update Latest Update: தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளி ஆவதற்கும், பயிர் காப்பீடு செய்து, அதற்கான காப்பீடு பெறுவதற்கும் விவசாய அடையாள எண் கட்டாயம் பெற வேண்டும். இந்த செய்தியை ஏற்கனவே பலரும் அறிந்திருப்பீர்கள். இருப்பினும், இன்னும் பிஎம் கிசான் திட்டத்தில் சேராமல் இருப்பவர்களுக்கும், பயிர் காப்பீடு செய்ய இருப்பவர்களுக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை விவசாய அடையாள எண் பெறாதவர்கள் உடனே பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, விவசாய அடையாள எண் பெறுவது எப்படி?, என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.  

விவசாயிகளுக்கான மிக முக்கிய அறிவிப்பு:

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வரும் விவசாய நலத்திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் இனி வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விவசாயிகளுக்கு விரைவாகவும் சென்று சேர்வதை உறுதி செய்ய புதிய டிஜிட்டல் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவித்தொகை, மானிய விலையிலான உரங்கள், பயிர்க் காப்பீடு மற்றும் தொடக்க வேளாண் கடன் உள்ளிட்ட அரசின் அனைத்துப் பலன்களையும் தடையின்றிப் பெறுவதற்கு "அக்ரி ஸ்டாக்" திட்டத்தின் கீழ் விவசாய அடையாள அட்டை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

மானிய உரங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இதுவரை திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும்போது, விவசாயியின் ஆதார் எண்ணை விற்பனை முனைய இயந்திரத்தில் உள்ளீடு செய்து, விவசாயிகளின் தேவை மற்றும் பயிர்ப்பரப்பிற்கு ஏற்ப உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தன.  

ஆனால் தற்போது, இந்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி 'உர விற்பனைக்கான கூட்டமைப்பு முறையில்' மானிய உரங்களை வழங்கிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இப்புதிய முறை திருவள்ளூர் மாவட்டம் உட்பட தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  

இதன்படி, இனிவரும் காலங்களில் அக்ரி ஸ்டாக் திட்டத்தின் கீழ் "உழவன் அடையாள எண்" பெற்று பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே, அவர்கள் சாகுபடி செய்யும் பயிர் மற்றும் அதன் உண்மையான நிலப்பரப்பின் அடிப்படையில் மானிய விலையிலான உரங்கள் விநியோகிக்கப்படும். பதிவு செய்யாத விவசாயிகளுக்கு உரங்கள் பெறுவதில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது.  

விவசாய அடையாள எண் எதற்கெல்லாம் அவசியம்?

இந்த டிஜிட்டல் உழவன் அடையாள அட்டை மற்றும் பதிவு முறை வெறும் உர மானியத்திற்கு மட்டுமேயானது அல்ல. மாறாக, வேளாண் துறை சார்ந்த கீழ்வரும் முக்கிய சேவைகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு இது கட்டாய ஆவணமாக மாறுகிறது:  

- பிஎம் கிசான் நிதி உதவி: தவணைத் தொகைகள் தொடர்ந்து வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை உறுதி செய்தல்.

- மானிய விலையிலான உரங்கள்: யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை அரசு மானிய விலையில் பெறுதல்.  

- பயிர் காப்பீட்டுத் திட்டம்: இயற்கை சீற்றங்கள், வறட்சி அல்லது வெள்ளத்தால் பயிர்கள் சேதமடையும் போது உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாகப் பெறுதல்.  

- தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்: சாகுபடிக்கான பயிர்க் கடன்கள் மற்றும் வட்டியில்லா/குறைந்த வட்டி கடன்களைப் பெறுதல்.  

- வேளாண் இயந்திரங்கள், அரசு மானியங்கள்: சொட்டுநீர்ப் பாசனம், விதை மானியம், பண்ணைக் கருவிகள் போன்ற அனைத்து அரசு நலத்திட்டங்கள்.  

விவசாய அடையாள எண் பெறுவது எப்படி?

விவசாயிகள் தங்களது அடையாள அட்டையைப் பதிவு செய்வதற்கும், அடையாள எண் பெறுவதற்கும் அரசு எளிய வழிகளை ஏற்படுத்தியுள்ளது:

1. அருகிலுள்ள இ-சேவை மையம்: விவசாயிகள் தங்கள் அருகாமையிலுள்ள பொது சேவை மையத்தை நேரடியாக அணுகி Farmer Registry பதிவை மேற்கொள்ளலாம்.  

2. வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்: தங்கள் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது உழவர் உதவி மையங்களை அணுகி விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.  

3. உழவன் செயலி அல்லது இணையதளம்: அரசு அறிவித்துள்ள பிரத்யேக போர்ட்டல் அல்லது உழவன் செயலி மூலமாகவும் தாமாகவே முன்வந்து பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன?

விவசாயிகள் பதிவு செய்யச் செல்லும்போது கீழ்க்கண்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்:

1. விவசாயியின் அசல் ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்.

2. நில உரிமை தொடர்பான ஆவணங்கள்: பட்டா, சிட்டா மற்றும் நில உரிமை ஆவணம்.

3. அனைத்து நிலங்களின் புல எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள்.  

4. PM Kisan மற்றும் மானியத் தொகைகள் பெறுவதற்கு விவசாயியின் வங்கிக் கணக்கு புத்தக நகல்

5. நடப்புப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர் விவரங்கள்.  

ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கான மிக முக்கிய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு முக்கியமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே Farmer Registry-யில் பெயர் பதிவு செய்துள்ள பல விவசாயிகள் தங்களது முழுமையான நிலங்களின் சர்வே எண்களை இன்னும் முழுமையாகப் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.  

அவ்வாறு விடுபட்டுள்ள விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையத்தையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநரையோ தொடர்பு கொண்டு, விடுபட்ட அனைத்து சர்வே எண்களையும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். முழுமையான நிலப்பரப்பு பதிவாகாத பட்சத்தில், சாகுபடி பரப்பிற்கு ஏற்ற உர ஒதுக்கீடோ அல்லது இழப்பீட்டுத் தொகையோ முழுமையாகக் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.  

இறுதியாக விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவிகள், உர மானியங்கள், பயிர்க் கடன் மற்றும் காப்பீட்டுத் திட்டப் பலன்கள் எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாகக் கிடைக்க வேண்டுமெனில், உழவன் அடையாள அட்டை பதிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எனவே, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக தங்களது ஆவணங்களுடன் பொது சேவை மையங்களை அணுகி, Agri Stack உழவன் அடையாள எண்ணைப் பெற்றுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES