SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நேஹா போரா அணிந்த டி-ஷர்ட் ஏன் தேசிய அளவில் பேசப்படுகிறது? 'ஒன் பீஸ்' சின்னத்தின் ரகசியம்!

Why Global Youth Use One Piece T-Shirt: டெல்லி முதல் இந்தோனேசியா வரை போராடும் ஜென்-சி இளைஞர்கள் ஏன் 'ஒன் பீஸ்' (One Piece) கார்ட்டூன் குறியீட்டையும், மண்டை ஓட்டு டீஷர்ட்டுகளையும் பயன்படுத்துகிறார்கள்? பாப் கலாச்சாரம் எவ்வாறு இன்றைய டிஜிட்டல் தலைமுறையின் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது என்பதை பார்ப்போம்.

Written By Shiva Murugesan
Published: Oct 14, 2026, 01:55 PM IST | Updated: Oct 14, 2026, 02:03 PM IST
Join

டெல்லி மாணவர் போராட்டத்தின் மிக முக்கிய முகங்களில் ஒருவராக அறியப்படும் நேகா போரா அணிந்திருந்த அந்த சிவப்பு நிற டீஷர்ட் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதில் 'ஒன் பீஸ்' (One Piece) என்ற வார்த்தையும், அதற்கு அருகில் வித்தியாசமான தொப்பி அணிந்த மண்டை ஓட்டு உருவமும் அச்சிடப்பட்டிருந்தது. வெறும் டெல்லியோடு இது நிற்கவில்லை. இந்தோனேசியாவில் வீதியில் இறங்கி போராடும் ஜென்-சி (Gen Z) இளைஞர்கள், மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மொராக்கோ, நேபாளம் என உலகம் முழுவதும் அரசாங்கங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர்கள் அனைவரும் இதே 'ஒன் பீஸ்' அடையாளத்தைத் தான் தங்கள் ஆயுதமாக ஏந்தியிருக்கிறார்கள்.

உலகத் தழுவிய அளவில் போராடும் அனைத்து ஜென்-சி இளைஞர்களும் ஒரே அடையாளத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி சாத்தியமானது? இதன்பின்னணியில் ஏதேனும் ரகசியக் கரங்கள் இயங்குகின்றனவா? அல்லது வெறும் பாப் கலாச்சாரத்தின் (Pop Culture) வெளிப்பாடுதானா? விரிவாகப் பார்ப்போம்.

மேலும் படிக்க - SIR விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்! கொரில்லா வியூகம்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான் -Explained

ஒன் பீஸ் (One Piece) என்றால் என்ன? அதன் கதை பின்னணி!

முதலில் இந்த 'ஒன் பீஸ்' என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஜப்பானில் உருவான ஒரு புகழ்பெற்ற 'மங்கா' (Manga) கார்ட்டூன் புத்தகம். இதனை எழுதியவர் எய்சீரோ ஓடா (Eiichiro Oda). 1997-இல் எழுதத் தொடங்கப்பட்ட இந்த கதை, பின்னர் அனிமேஷன் (Anime) தொடராக வெளிவந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களைக் கவர்ந்தது.

இந்த கதையின் மையக்கரு கடல் கொள்ளையர்களைப் (Pirates) பற்றியது. கதையில் கோல் டி. ரோஜர் (Gol D. Roger) என்ற சக்திவாய்ந்த கடல் கொள்ளையர்களின் ராஜா இருக்கிறான். அவனது அட்டூழியங்கள் தாங்க முடியாமல், கதையில் வரும் 'உலக அரசாங்கம்' (World Government) அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. மரண தண்டனைக்கு முன் அவன், "நான் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒரு புதையலை ரகசிய இடத்தில் வைத்துள்ளேன். தைரியம் உள்ளவன் போய் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு உயிரை விடுகிறான்.

அந்த புதையலைத் தேடி உலகமே கடலுக்குப் படை எடுக்கிறது. அதில் மங்கி டி. லூஃபி (Monkey D. Luffy) என்ற சிறுவனும் தனது தலையில் வைக்கோல் தொப்பியை மாட்டிக்கொண்டு புறப்படுகிறான்.

ஆனால் கதை நகர நகரத்தான் தெரிகிறது. இது வெறும் புதையல் வேட்டை மட்டுமல்ல. அந்த கதையில் வரும் உலக அரசாங்கம், கொடூரமான ஊழல் நிறைந்தது, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதது மற்றும் மனித கடத்தலில் ஈடுபடக்கூடிய படுபயங்கரமான அடக்குமுறை அரசாங்கம். அந்த சிறுவன் லூஃபி, அந்த அரசாங்கத்தின் எந்தவொரு அடக்குமுறைக்கும் சட்ட திட்டங்களுக்கும் பணியாமல், தனது நண்பர்களுடன் சேர்ந்து அதிகாரத்திற்கு எதிராகத் தீவிரமாகப் போராடுகிறான். இதுவே கதையின் அடிப்படை.

கின்னஸ் சாதனை படைத்த ஒரு கார்ட்டூன் புத்தகம்!

ஆரம்பத்தில் சாதாரண விற்பனையைக் கண்ட இந்த புத்தகம், காலப்போக்கில் உலகின் மிகப்பெரிய வர்த்தக சாதனையைப் படைத்தது. உலகிலேயே அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகம் என்ற கின்னஸ் சாதனையை இது வைத்திருக்கிறது. 50 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இதன் படைப்பாளி எய்சீரோ ஓடா, காமிக்ஸ் மூலம் உலகிலேயே அதிக பணம் சம்பாதித்த எழுத்தாளரானார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முதல் உலக புகழ்பெற்ற பிரபலங்கள் வரை பலரும் இதன் ரசிகர்களாக உள்ளனர். 900-க்கும் மேற்பட்ட எபிசோடுகளைக் கொண்ட இதன் அனிமேஷன் தொடர், கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் வைரலாகி கோடிக்கணக்கான இளைஞர்களைச் சென்றடைந்தது. 2023-இல் நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்ட இதன் லைவ்-ஆக்ஷன் தொடரும் 84 நாடுகளுக்கு மேல் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

கார்ட்டூன் கேரக்டர் எப்படி போராட்டக் குறியீடாக மாறியது?

இன்றைய ஜென்-சி இளைஞர்கள் ரியல் டைமில் சந்திக்கும் அரசாங்கங்களின் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அடக்குமுறைகளை, கதையில் வரும் 'வேர்ல்ட் கவர்மெண்ட்' உடன் எளிதாகப் பொருத்திப் பார்க்கிறார்கள். கதையின் நாயகனான மங்கி டி. லூஃபியை தங்கள் பிரதியாகவே கருதுகிறார்கள்.

ஒரு கார்ட்டூனிலிருந்து எப்படி அரசியல் உணர்வு வரும் என்ற கேள்வி எழலாம். ஆனால் இன்றைய இளைஞர்கள் 'டிஜிட்டல் நேட்டிவ்ஸ்' (Digital Natives), அதாவது டிஜிட்டல் உலகத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள்.

முந்தைய தலைமுறையினர் அரசியல் உணர்வு பெற பொதுக்கூட்டங்களுக்கும், தடிமனான கோட்பாட்டு புத்தகங்களுக்கும் சென்றார்கள். ஆனால் டிஜிட்டல் உலகில் வளர்ந்த ஜென்-சி இளைஞர்களுக்கு சித்தாந்தங்களை விட குறியீடுகள் (Symbols), இமேஜ்கள் மற்றும் கார்ட்டூன்கள் மூலமாகத் தங்களை வெளிப்படுத்துவது மிகவும் எளிதாகவும் வேகமாகவும் இருக்கிறது. ஒரு சோஷியல் மீடியா போஸ்ட் போடுவது போல, ஒரு லைக் அல்லது ஷேர் செய்வது போல, தங்கள் எதிர்ப்பு உணர்ச்சியை வெளிப்படுத்த 'ஒன் பீஸ்' அவர்களுக்கு மிகச்சரியான குறியீடாக அமைந்தது.

'ஒன் பீஸ்' மட்டுமல்ல... ஹங்கர் கேம்ஸ் முதல் த்ரீ-ஃபிங்கர் சல்யூட் வரை!

ஜென்-சி இளைஞர்கள் சினிமா மற்றும் பாப் கலாச்சாரத்தைப் போராட்டங்களுக்குப் பயன்படுத்துவது இது முதன்முறையல்ல.

த்ரீ-ஃபிங்கர் சல்யூட் (Three-Finger Salute): 'ஹங்கர் கேம்ஸ்' (Hunger Games) திரைப்பட வரிசையில் சர்வாதிகாரிக்கு எதிராக மக்கள் மூன்று விரல்களை உயர்த்திக் காட்டி 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற வகையில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதனைத் தாய்லாந்து நாட்டில் ராணுவப் புரட்சிக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் அப்படியே கையிலெடுத்தனர். பின்னணியில் மியான்மர் போராட்டங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது.

சிலி போராட்டங்கள்: 2019-இல் சிலி நாட்டில் நடந்த இளைஞர்களின் எழுச்சியிலும் இது போன்ற பாப்-கலாச்சாரக் கேரக்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா: பிலிப்பைன்ஸில் வெள்ள நிவாரண நிதி ஊழலுக்கு எதிராகவும், இந்தோனேசியாவில் அரசியல்வாதிகளின் ஆடம்பர சலுகைகளுக்கு எதிராகவும் இளைஞர்கள் இந்த 'ஒன் பீஸ்' கொடியை தங்கள் வாகனங்களில் கட்டிப் போராடினார்கள்.

நேபாளம்: அந்த நாட்டில் நாடு குழப்பத்தில் மூழ்கியபோது, ​​சிங்ஹா தர்பாரில் கொடி தோன்றியதால், அந்தச் சின்னம் அங்கும் முக்கியத்துவம் பெற்றது. உளவியல் போர் மூலம் குழப்பத்தை உருவாக்கி, எந்தவொரு அரசாங்கத்தையும் கவிழ்ப்பதற்காக, ஆழமான அரசு தீட்டிய திட்டத்தின் ஒரு பகுதி இது என்று சிலர் கருதுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இந்த இயக்கத்தை வரவேற்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவும், நேபாளம் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்ததைப் போல வெற்றி காணவும் முடியும்.

நேஹா போரா 'ஒன் பீஸ்' டி-ஷர்ட்: குறிப்பாக நேஹா போரா 'ஒன் பீஸ்' டி-ஷர்ட்டைத் தேர்ந்தெடுத்தது, வரவிருக்கும் நாட்களில் ஏற்படவிருக்கும் கொந்தளிப்பான சூழல் குறித்து அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் ஒரு மறைமுகச் செய்தியாகக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டம் அமைதியானதா அல்லது நேபாளத்தைக் குழப்பத்திற்கும் வன்முறைக்கும் தள்ளிய சூழலைப் போன்றதா என்பது இன்னும் தெரியவில்லை.

'ஒன் பீஸ்' குறித்து இளைஞர்கள் கூறும்போது, "நாங்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், எங்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையின் மொழி ஒன்றுதான். அதனால் தான் தேசம் கடந்து இந்த அடையாளத்தைப் பயன்படுத்துகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க - இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மாணவி! யார் இந்த நேஹா போரா?

இதன்பின்னணியில் ரகசியச் சக்திகள் இயங்குகின்றனவா? (Conspiracy Theories)

இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில், "இந்தக் கொடி நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க உருவாக்கப்பட்ட சதி, இதைப் பிடிப்பது தேசத்துரோகம்" என்று அரசியல்வாதிகள் குற்றம் சாட்டினர். இதன் பின்னணியில் ஏதேனும் சதி அமைப்போ அல்லது 'இலுமினாட்டி' குழுக்களோ இயங்குகின்றனவா என்ற கேள்விகள் பரப்பப்பட்டன.

ஆனால் சமூகவியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, இதற்குப் பின்னால் எந்தவொரு மிகப்பெரிய ரகசியச் சதியும் இல்லை. இதனை "காப்பிகேட் போராட்டங்கள்" (Copycat Protests) என்று வகைப்படுத்தலாம். டிஜிட்டல் உலகத்தில் இருக்கும் இளைஞர்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் புதுமையான போராட்ட வடிவத்தை இணையம் வழியாகக் கண்டு, அதைத் தங்கள் நாட்டிலும் அப்படியே பின்பற்றுகிறார்கள்.

மேலும் அரசாங்கங்கள் தங்கள் சொந்த நிர்வாகத் தோல்விகளையும், இளைஞர்களின் நியாயமான கோபத்தையும் மறைப்பதற்காக, "இவர்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு ரகசிய சக்தி இருக்கிறது" என்ற சதிக்கோட்பாடுகளைப் பரப்புகின்றன.

ஜென்-சி போராட்டங்களின் தனித்துவமான இயல்புகள்

உலகளவில் நடக்கும் இந்த ஜென்-சி போராட்டங்களில் சில பொதுவான தன்மைகள் காணப்படுகின்றன:

தலைவர்கள் இல்லாத இயக்கம் (Leaderless Movements): இப்போராட்டங்களுக்கு என்று தனியாகக் குறிப்பிட்ட தலைவரோ அல்லது அதிகார அமைப்போ (Hierarchy) இருப்பது இல்லை.

திடீர் எழுச்சி (Spontaneous): நீண்டகால திட்டமிடல் அல்லது சித்தாந்த அஜெண்டாக்கள் இன்றி, ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் கோபத்தால் திடீரெனத் தோன்றி 5 அல்லது 10 நாட்களில் தீவிரமடையும்.

டிஜிட்டல் ஒருங்கிணைப்பு: சோஷியல் மீடியா தளங்கள் மூலமாகவே ஒத்த எண்ணம் கொண்ட இளைஞர்கள் நொடிப் பொழுதில் ஒன்று கூடுகிறார்கள்.

மனிதர்களுக்குச் சுதந்திரத்தின் மீதும் நியாயத்தின் மீதும் விருப்பம் இருக்கும் வரை, அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதன் புதுமையான வடிவங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 'ஒன் பீஸ்' கதையில் வரும் அந்தப் புகழ்பெற்ற வசனத்தைப் போல: 

"மனிதர்களின் கனவுகளும், சுதந்திரத்திற்கான வேட்கையும் இருக்கும் வரையிலும், புரட்சித்தீயின் நெருப்பை யாராலும் அணைக்கவே முடியாது"

மேலும் படிக்க - Explained | "ஜனநாயகத்தை காப்போம்" டெல்லியில் தொடங்கிய March for Democracy போராட்டத்தின் முழு பின்னணி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES