தங்கம் ரூ.98000 ஆக குறையுமா? வைரலாகும் தகவலின் பின்னணி என்ன? உண்மை இதுதான்!
Gold Price Analysis 2026: சமூக வலைதளங்களில் பரவி வரும் தங்கம் விலை ரூ.98000 ஆக குறையும் என்ற தகவல் உண்மையல்ல. இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விலை குறையும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா எந்த அதிகாரப்பூர்வ இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. இந்தியாவில் தங்க விலையை என்பது இறக்குமதி வரி, டாலர்-ரூபாய் மதிப்பு, GST மற்றும் உள்ளூர் செலவுகள் பொருத்து தீர்மானிக்கப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் தங்கம் விலை குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.98000 வரை குறையப் போகிறது என்றும், அதற்கான கணிப்பை பேங்க் ஆஃப் அமெரிக்கா வெளியிட்டுள்ளது என்றும் பலர் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் நெருங்கியுள்ள நிலையில், தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் பேங்க் ஆஃப் அமெரிக்கா இந்தியாவில் தங்கம் ரூ.98000 ஆகும் என்று கூறியதா? அல்லது சர்வதேச சந்தை கணிப்புகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளனவா? தங்கம் விலை குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பேங்க் ஆஃப் அமெரிக்கா சொன்னது என்ன?
பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America) தனது விலைமதிப்புள்ள உலோகங்கள் தொடர்பான சந்தை அறிக்கையில், தங்கத்தின் சர்வதேச விலையில் அடுத்த சில மாதங்களுக்கு அழுத்தம் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. சில சூழ்நிலைகளில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு குறையலாம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.
ஆனால் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் சில்லறை விலை ரூ.98000 ஆகும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா எங்கும் அதிகாரப்பூர்வமாகக் கூறவில்லை. தங்கத்தின் அவுன்ஸுக்கு விலை குறையலாம் எனக் கூறியதை, சமூக வலைதளங்களில் "இந்திய சந்தையில் தங்கத்தின் விலை குறையலாம்" எனப் பரப்பப்பட்டதால், அது தங்கம் வான்குபவர்களிடையே விவாதம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை குறையுமா?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையும் என்ற கணிப்பை சிலர் இந்திய ரூபாயில் மாற்றிக் கணக்கிட்டனர். அதன் அடிப்படையில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.98000 முதல் ரூ.99000 வரை வரலாம் என்ற மதிப்பீடு வெளியானது.
ஆனால் இந்தியாவில் விற்கப்படும் தங்கத்தின் விலை என்பது சர்வதேச விலையை மட்டும் சார்ந்ததல்ல. இறக்குமதி வரி, போக்குவரத்து செலவு, சுத்திகரிப்பு செலவு, விற்பனையாளர் பிரீமியம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல கூறுகள் அதில் அடங்கும்.
இந்தியாவில் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எனவே சர்வதேச விலை மட்டுமே இறுதி விலையை தீர்மானிக்காது.
இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணம் என்ன?
- சர்வதேச தங்க விலை உயர்வு
- ரூபாய் பலவீனமானால் தங்கம் விலை உயரும்
- இறக்குமதி வரி காரணமாக இறுதி விலையை அதிகரிக்கும்
- ஜிஎஸ்டி மற்றும் பிற செலவுகள் காரணமாக நுகர்வோர் செலவை உயர்த்தும்
- மேக்கிங் சார்ஜ் மூலம் நகை வாங்கும்போது கூடுதல் செலவாகும்
- இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் குறைந்தாலும், இந்திய சந்தையிலும் குறையும் என்று உறுதியாகக் கூற முடியாது.
தங்கம் விலை சரிவை சந்திக்க என்ன காரணம்?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு விலை உயர்ந்த தங்கம், தற்போது சரிவை சந்தித்துள்ளது. அதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
அமெரிக்க வட்டி விகிதங்கள்
தங்கம் வட்டி வருமானம் தராத சொத்து. அதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும்போது, முதலீட்டாளர்கள் பத்திரங்கள் மற்றும் வட்டி தரும் முதலீட்டு வாய்ப்புகளை நோக்கி நகர்கிறார்கள். இதன் விளைவாக தங்கத்தின் மீதான தேவை குறையக்கூடும்.
வலுவான அமெரிக்க டாலர்
சர்வதேச சந்தையில் தங்கம் டாலரில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. டாலர் வலுப்பெற்றால் பிற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு தங்கம் அதிக விலையாக மாறுகிறது. இதுவும் விலையை பாதிக்கும்.
ஆபரண தங்கத்திற்கான தேவை குறைவு
உயர்ந்த விலை காரணமாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் நகை வாங்கும் அளவு குறைந்துள்ளது. இதனால் சந்தையில் குறுகியகால அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
தங்கத்தை வாங்கி குவிக்கும் மத்திய வங்கிகள்
தங்கத்தின் எதிர்காலம் முழுவதும் எதிர்மறையாக இல்லை. உலகின் பல மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றன. பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலை, போர்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவை அதிகரித்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தை நாடும் வாய்ப்பு உள்ளது.
இந்திய முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பண்டிகை காலம் அல்லது திருமணத் தேவைக்காக தங்கம் வாங்கப் போகிறவர்கள், ரூ.98000 விலை குறைப்பு என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தங்கம் தேவை உள்ளவர்கள் ஒரே நேரத்தில் அதிக தங்கம் வாங்குவதற்கு பதிலாக, வெவ்வேறு கட்டங்களாக வாங்குவது அபாயத்தை குறைக்க உதவும்.
மேலும் படிக்க - தங்கம் விலை இன்னும் குறையும்.. எவ்வளவு தெரியுமா? ஆனந்த் சீனிவாசன் கணிப்பு!