Gold Price Anand Srinivasan: தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தங்கம் விலை இந்த சரிவு தொடரும் என ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
1/5
ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை
இந்திய பங்குச்சந்தை தற்போது ஏற்றத்துடன் காணப்பட்டாலும், இந்த நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சந்தை சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து 23,000 புள்ளிகளை கடந்திருந்தாலும், தற்போதைய பொருளாதார சூழல் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் பற்றாக்குறை மற்றும் நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவை இந்திய பங்குச்சந்தைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
2/5
கச்சா எண்ணெய் விலை உயர்வு.. இந்திய பொருளாதாரத்திற்கு சிக்கல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 118 டாலரை தாண்டியுள்ளதாகவும், இந்திய இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை 125 டாலரை தாண்டியுள்ளதாகவும் ஆனந்த் சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து, டாலர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என கூறியுள்ளார். மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் நிறுவனங்களின் மூலப்பொருள் செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என தெரிவித்துள்ளார். ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதன் மூலமே டாலர் வரவை மேம்படுத்த முடியும் என்று இந்தியா தனது பொருளாதார கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3/5
தங்கம் விலை தொடர்ந்து குறையும்!
தங்கத்தின் விலை ஏற்கனவே கணிசமாக குறைந்து வரும் நிலையில், அடுத்த சில மாதங்களுக்கும் இந்த விலை சரிவு தொடர வாய்ப்புள்ளதாக ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் வட்டி விகித முடிவுகள் தங்கத்தின் விலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் விளக்கி உள்ளார். குறிப்பாக வட்டி விகிதங்கள் உயரத்தப்படும் சூழலில் தங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம் என்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் 200 முதல் 300 டாலர்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளார். அதேநேரத்தில், சீனா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குவது அதன் விலைக்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
4/5
ஜடி, ஃபார்மா பங்குகளுக்கு சாதகமான சூழல்..
அமெரிக்க சந்தையில் கூகுள், இன்டெல், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளதாக ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக, இந்தியாவின் ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் ஏற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாற்றங்கள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என கூறியுள்ளார். மேலும், டிரெண்ட் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தாலும், அதன் பங்கு மதிப்பீடு அதிகமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். வட்டி விகித மாற்றங்கள், தங்கத்தின் விலை சரிவு ஆகியவற்றால் தங்கக் கடன் நிறுவனங்களின் பங்குகளிலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
5/5
முதலீட்டாளர்களுக்கு ஆனந்த் சீனிவாசன் அறிவுரை
தற்போதைய சந்தை சூழலில் முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு பங்குகளை வாங்குவதை தவிர்த்து, தங்களுக்கு புரிந்த நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என ஆனந்த் சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளார். சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் நிலவுவதால் பாதுகாப்பான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் முதலீடு செய்வதற்கு முன்பு சந்தை நிலவரத்தை கவனிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். குறிப்பாக வெள்ளியில் முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.