SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் இம்முறை வெற்றி பெறுவது எப்படி?

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் குரூப் 4, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்குத் தயார் கையாள வேண்டிய முக்கிய உத்திகள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Aug 07, 2026, 03:24 PM IST | Updated: Aug 07, 2026, 03:30 PM IST
Join

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குச் சில ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருப்பவர்கள், 10 அல்லது 20 மதிப்பெண்களில் வெற்றியைத் தவறவிடுவது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் தான். ஆனால், நீங்கள் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது. உங்களின் இந்தச் சிறிய இடைவெளியைக் குறைத்து, அடுத்த தேர்வில் நிச்சயம் வெற்றி பெறவும், வினாத்தாள் வடிவம் மற்றும் தமிழ் பாடத்தைக் கையாளுவதற்கும் சில முக்கிய ஆலோசனைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ வினாத்தாள் அமைப்பு

குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுகளின் வினாத்தாள் கட்டமைப்பு பெரும்பாலும் ஒன்றுதான். இரண்டு தேர்வுகளிலுமே மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.

பொதுத் தமிழ்: 100 வினாக்கள்

பொது அறிவு: 75 வினாக்கள்

கணிதம் மற்றும் திறனறி பயிற்சி: 25 வினாக்கள்

குரூப் 4 தேர்வு பத்தாம் வகுப்புத் தரத்திலும், குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு பட்டப்படிப்புத் தரத்திலும் வினாக்களைக் கொண்டிருக்கும். இதனால் குரூப் 2ஏ வினாத்தாளில் 'கூற்று மற்றும் காரணங்கள்' வடிவிலான மற்றும் 'பொருத்துக' வடிவிலான வினாக்கள் சற்று நீளமாகவும் ஆழமாகவும் இருக்கும்.

தமிழ் பாடம்: கடினமான வினாக்களை எதிர்கொள்வது எப்படி?

கடந்த தேர்வுகளில் தமிழ் வினாத்தாள் கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து நிலவியது. அதற்கு முக்கியக் காரணம், டிஎன்பிஎஸ்சி நேரடியாகப் புத்தக வரிகளை மட்டும் கேட்காமல், புரிந்து படிக்கும் வகையிலான வினாக்களைக் கேட்கத் தொடங்கியுள்ளதுதான். மேலும், பழைய மற்றும் புதிய பாடப்புத்தகங்களின் ஒருங்கிணைந்த பகுதிகளிலிருந்தும் வினாக்கள் ஆழமாகக் கேட்கப்பட்டன.

வரவிருக்கும் தேர்வுகளிலும் இதே போன்ற அணுகுமுறை தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளன. வினாத்தாள் எப்படி இருந்தாலும், வரிக்கு வரி மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, இலக்கணத்தின் அடிப்படை விதிகளைப் புரிந்து படித்து, இலக்கியப் பகுதியின் பின்னணியைத் தெரிந்து கொண்டால் தமிழ்ப் பகுதியில் அதிக மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.

10 முதல் 20 மதிப்பெண் இடைவெளியைக் குறைப்பது எப்படி?

நீங்கள் 10 முதல் 20 மதிப்பெண்களில் தோல்வியைத் தழுவுகிறீர்கள் என்றால், உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்று அர்த்தமல்ல; தேர்வு அறையில் சில சிறிய தவறுகளை செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, கடந்த தேர்வு வினாத்தாளை எடுத்து உங்களின் விடைத்தாளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் செய்த தவறுகள் தெரிந்த கேள்விகளா, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கேள்விகளா அல்லது முற்றிலும் தெரியாத கேள்விகளா எனப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் தெரிந்த கேள்விகளில் செய்யும் 5 முதல் 10 தவறுகள்தான் உங்களை வெற்றிக்கோட்டிற்கு வெளியில் நிறுத்துகின்றன.

பலவீனமான பகுதிகளை வலுப்படுத்துதல்

அடுத்ததாக, பாடவாரியாக உங்களின் மதிப்பெண்களைக் கணக்கிடுங்கள். பல தேர்வர்கள் தமிழ் மற்றும் கணிதத்தில் கவனம் செலுத்திவிட்டு, பொது அறிவுப் பகுதியில் உள்ள அறிவியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் அல்லது யூனிட் 8 மற்றும் 9 ஆகிய பகுதிகளைக் கோட்டை விட்டுவிடுவார்கள். உங்களுக்கு எந்தப் பாடம் சரியாக வரவில்லையோ, அந்தப் பலவீனமான பகுதிக்கு அடுத்த சில மாதங்களுக்கு உங்களின் தினசரி படிப்பு நேரத்தில் 50% கால அளவை ஒதுக்கி, அதை உங்களின் பலமாக மாற்ற வேண்டும். அனைத்துப் பாடங்களிலும் சமமான கவனம் செலுத்துவது மட்டுமே உங்களைக் கட் ஆப் மதிப்பெண்ணைத் தாண்ட வைக்கும்.

மாதிரித் தேர்வுகள்

வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்பவர்களின் அடுத்த பெரிய பலவீனம் நேர மேலாண்மை. தேர்வு அறையில் வினாக்களைப் படித்துப் புரிந்துகொள்வதற்கே பலருக்கு நேரம் பற்றாமல் போய்விடுகிறது, இதனால் கடைசி நிமிட பதற்றத்தில் தெரிந்த கேள்விகளுக்குத் தவறான வட்டமிட்டு விடுவார்கள்.

இதைத் தவிர்க்க, வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை 200 வினாக்கள் கொண்ட முழு மாதிரித் தேர்வை மூன்று மணி நேரக் கட்டுப்பாட்டுடன் OMR தாளில் எழுதிப் பழக வேண்டும். இது உங்களின் வேகம், துல்லியம் மற்றும் தேர்வு அறையின் பயத்தைப் போக்கி, அந்த 15-20 மதிப்பெண் இடைவெளியை மிக எளிதாக நிரப்பி உங்களை வெற்றியாளராக மாற்றும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES