TNPSC Group 2 Exam Free Coaching: தமிழக அரசின் பொரும்பாலான துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. இதில், குரூப் 2 தேர்வுகளை பெரும்பாலானோர் ஆண்டுதோறும எழுதி வருகின்றனர். தமிழ்நாடு அரசு துறையில் உதவி ஆய்வாளர், சார் பதவியாளர், தனிப்பிரிவு உதவியளார், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இந்தாண்டு குரூப் 2 முதல் நிலை தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 2 தேர்வுக்கு 41 காலிப் பணியிடங்களும், குரூப் 2ஏ தேர்வுக்கு 780 காலிப் பணியிடங்களுக்கு நிரப்பப்படுகிறது. இதற்கு செப்டம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், இதனால், தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தொகுதி-II/IIA (Group II/IIA) சேவைகளுக்கான தொகுதி-II 41 மற்றும் தொகுதி-IIA - 780 காலிப்பணியிடங்களும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இளநிலை இணை அலுவலர்களுக்கான (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை) 1538 காலிப்பணியிடங்களும், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் IBPS-ல் வாடிக்கையாளர் சேவைப் பணியாளர்களுக்கான 11403 காலிப்பணியிடங்களும், பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிறப்பு அலுவலர்களுக்கான 206 காலிப்பணியிடங்களும் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (JMGS-I) பணியாளர்களுக்கான 250 காலிப்பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்திலும், பந்தலூரில் TEWS மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் கூடுதல் பயிற்சி மையத்திலும் நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள ஆர்வலர்கள், இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்ததற்க்கான ஆவணங்களுடன், இவ்வலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்தோ அல்லது 0423-2444004 / 7200019666 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.