சோஷியல் மீடியா பிரபலத்தைக் காண டெல்லி சென்ற சென்னை நபர் அடித்துக் கொலை
நவம்பர் 7 அன்று, சென்னையிலிருந்து வந்த நபர் சமூக ஊடக பிரபலத்தின் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் தந்தையும் சில அண்டை வீட்டாரும் அவரைப் பிடித்துத் தாக்கியதில், அவருக்குக் கடுமையான உள் மற்றும் வெளிக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சென்னை: சமூக ஊடக மாயையின் பிடியில் சிக்கி மற்றொரு நபர் உயிரிழந்துள்ளார். சோஷியல் மீடியா பிரபலம் ஒருவரைச் சந்திப்பதற்காகச் சென்னையில் இருந்து டெல்லிக்குச் சென்ற நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நவம்பர் 7 அன்று நிகழ்ந்துள்ளது.
இந்த யூடியூபர் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் சுமார் 29 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். அவர் மது விஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. கடந்த சில வாரங்களாக, தனது வரவிருக்கும் திருமணம் குறித்த காணொளிகளை அவர் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இன்ஃப்ளுயன்சரை சந்திக்க சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்ற நபர் யார்? அவர் கொல்லப்பட்டது ஏன்? சமூக ஊடகப் பிரபலத்தின் குடும்பம் அவரை கொன்றதா?
காவல்துறை கூறுவது என்ன?
காவல்துறை விசாரணையின்படி, இறந்த நபர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் சமூக ஊடகங்கள் மூலம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் அப்பெண்ணின் காணொளிகளுக்குத் தவறாமல் லைக் செய்து வந்தார், மேலும் அவரைச் சந்திப்பதற்காக டெல்லிக்குப் பயணம் செய்வதற்கு முன்பே அவர் மீது ஒருதலைக் காதல் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்
அந்தப் பெண்ணுக்குப் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் 29 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
இந்த வழக்கு குறித்து காவல்துறை அதிகாரி பிடிஐ-யிடம் தெரிவித்ததாவது:
"நவம்பர் 7 அன்று, சென்னையிலிருந்து வந்த நபர் சமூக ஊடக பிரபலத்தின் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் தந்தையும் சில அண்டை வீட்டாரும் அவரைப் பிடித்துத் தாக்கியதில், அவருக்குக் கடுமையான உள் மற்றும் வெளிக்காயங்கள் ஏற்பட்டுள்ளன."
சிகிச்சை பலனின்றி மரணம்
காயமடைந்த அந்த நபர் முதலில் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரை குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு மாற்றினர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், அவர் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு சிகிச்சையின்போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் தந்தை மற்றும் அண்டை வீட்டு நபர் கைது
அவரது மரணத்திற்குப் பிறகு, மது விஹார் காவல்துறையினர், 'கொலைக்குச் சமமான குற்றமற்ற மரணம்' (culpable homicide not amounting to murder) தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அப்பெண்ணின் தந்தையையும், அண்டை வீட்டில் இருந்த ஒரு நபரையும் கைது செய்தனர்.
அந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் பிற அண்டை வீட்டாருக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக வலையில் உள்ள பிற நபர்களை அடையாளம் காணவும், தாக்குதலில் அவர்களின் பங்கைக் கண்டறியவும், சம்பவ இடத்திலும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் சிசிடிவி காட்சிகளை காவல்துறை குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.
சோஷியல் மீடியா பிரபலங்களின் ஆளுமை மக்களை ஆக்கப்பூரவாகவும் பாதிக்கலாம், எதிர்மறையாகவும் பாதிக்கலாம். வீடியோக்களிலும், ரீல்ஸ்களிலும் காணும் நபர்களை சுற்றி சொந்த வாழ்வுக்கான கனவுகளைக் காண்பது எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சாட்சியாக அமைகிறது.