தமிழக முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி சென்னை பெரம்பூர். முதலமைச்சர் வெற்றி பெற்றதால், தங்களின் தொகுதிக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், தற்போது அவர்கள் தெருவில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், முதலமைச்சர் விஜய் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே தங்கள் தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பெரம்பூர் தொகுதியின் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள பிளாக் 5, 6, 7 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, காலி குடங்களுடன் மீனாம்பாள் சாலை சந்திப்பில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த கொடுங்கையூர் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குடிநீர் வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை விரைவில் சீரமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி நகர் மற்றும் புதுநகர் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனையை முன்வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மத்திய குறுக்குச் சாலையில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் ஒன்று திரண்டு, தங்கள் பகுதிக்கு தொடர்ந்து 6 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்கனவே பலமுறை சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்ததாகவும், தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்ததாகவும் கூறினர். ஆனால், தங்களது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வேறு வழியின்றி சாலையில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூரில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியாமன குடிநீர் கூட சீராக வழங்கப்படவில்லை எனக் கூறி போராட்டங்கள் நடைபெறுவது, தொகுதியின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.