Scholarship : மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ‘பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்’ (PM YASASVI Top class education in schools) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2026-27-ஆம் கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த பள்ளிகளில் (Top Class Schools - 100% தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகள்) 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவ, மாணவியர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக, ஆண்டொன்றுக்கு 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000/- வரையிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரையிலும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மொத்த உதவித்தொகையில் 30 சதவீதம் மாணவிகளுக்குப் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, மாணவ/மாணவியர் OBC, EBC அல்லது DNT பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியமாகும். அத்துடன், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 100% தேர்ச்சி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் நடப்பாண்டில் பயில்பவராக இருக்க வேண்டும்.
கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் உதவித்தொகை பெற்று பயனடைந்து, தற்போது நடப்பாண்டில் (2026-27) 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்களது விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (https://scholarships.gov.in) வாயிலாக வரும் செப்டம்பர் 30, 2026-க்குள் புதுப்பித்தல் (Renewal) செய்து விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 15, 2026 ஆகும்.
நடப்பாண்டில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் புதிதாக (Fresh) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பத் தேதிகள் பின்னர் NSP இணையதளத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் http://socialjustice.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பார்வையிட்டுத் தகவல்களைப் பெறலாம். தகுதியுள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது