சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரக் கேமராக்கள் மூலம் இ-சலான் முறையில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் குறித்த தகவல்களை வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளவும், நிலுவைத் தொகையை முறையாகச் செலுத்தவும் வசதியாக சென்னை மாநகரம் முழுவதும் 15 இடங்களில் சிறப்பு கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை விரிவான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையிலிருந்து செல்போன்களுக்கு அனுப்பப்படும் அபராதத் தகவல் லிங்க்குகளை (Link), சைபர் மோசடி என்று கருதி பெரும்பாலான பொதுமக்கள் கிளிக் செய்யத் தயங்குகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட தகவலே தெரிவதில்லை என்பதால், நிலுவைத் தொகையை முறையாக வசூலிக்கும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்பு அழைப்பு மையங்கள் வரும் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை முழுமையாகச் செயல்படும். இம்மையங்கள் மூலம் வாகன ஓட்டிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் நிலுவையில் உள்ள இ-சலான் விவரங்கள் மொத்தமாகத் தெரிவிக்கப்படும். மேலும் தொலைபேசி வாயிலாகவோ அல்லது பொதுமக்கள் நேரில் சென்றோ விசாரிக்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள அபராதத் தொகை குறித்த தகவல்களும் வழங்கப்படும்.
தகவல் பெற்ற பிறகு, நிலுவையில் உள்ள அபராத விவரங்களைச் சரிபார்த்து அதற்கான தொகையைச் செலுத்த வாகன ஓட்டிகளுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதிக்கப்படும். அத்துடன், ஓட்டுநர் உரிமத்தைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தல் அல்லது நிரந்தரமாக ரத்து செய்தல் போன்ற கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
ஐசிஎப் இணைப்பு காவல் உதவி மையம் – அயனாவரம்.
மியூசிக் அகாடமி காவல் உதவி மையம் – ராயப்பேட்டை.
கிரீன்வேஸ் சாலை சந்திப்பு காவல் உதவி மையம் – அபிராமபுரம்.
ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பு காவல் உதவி மையம்.
அண்ணாநகர் ரவுண்டானா போக்குவரத்து காவல் உதவி மையம்.
அண்ணா வளைவு போக்குவரத்து காவல் உதவி மையம்.
மதுரவாயல் அழைப்பு மையம் – மதுரவாயல் காவல் நிலைய வளாகம்.
மாதவரம் போக்குவரத்து காவல் நிலையம் (மாதவரம் ரவுண்டானா).
பூக்கடை அழைப்பு மையம் – யானைகவுனி காவல் நிலைய தரைத்தளம்.
வண்ணாரப்பேட்டை அழைப்பு மையம் – புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், 2வது தளம்.
புளியந்தோப்பு அழைப்பு மையம் – செம்பியம் காவல் நிலையம், 2வது தளம்.
தி.நகர் அழைப்பு மையம் – மாம்பலம் காவல் நிலைய வளாகம்.
அடையாறு அழைப்பு மையம் – அடையாறு காவல் நிலைய வளாகம்.
புனித தோமையர் மலை மையம் – கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்.
வேப்பேரி மையம் – போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் 7வது தளம்.