Chennai Traffic Diversion: இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறும். சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து, மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களின் நடமாட்டம், கேட்பாரற்ற வாகனங்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகள், முக்கிய இடங்களில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டும், பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் ஆர்பிஐ சுரங்கப்பாதை வடக்கு பகுதீ வரை உள்ள காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் ஃபிளாக் ஸ்டாஃப் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
காலை 8.10 மணிக்கு முன் வரும் சிவப்பு மற்றும் ஊதா நிற அனுமதிச் சீட்டுகளைக் கொண்ட வாகனங்கள் ராஜாஜி சாலை வழியாக தலைமைச் செயலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும். இருப்பினும், காலை 8.10 மணிக்கு பிறகு வருபவர்கள் போர் நினைவிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பாஸ் இல்லாத வாகனங்கள் உழைப்பாளர் சிலை வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு வாலாஜா சாலை → அண்ணா சாலை → ஐலண்ட் கிரவுண்ட் 9வது நுழைவாயில் வழியாக வாகனங்கள் பார்க்கிங் பகுதிக்கு திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் முத்துசாமி பாலம், என்எஃப்எஸ் சாலை, பாரிஸ் கார்னர் வழியாக செல்லலாம். காமராஜர் சாலை நோக்கிச் செல்லும வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, ஊதா, நீலம், இளஞ்சிவப்பு பாஸ் வாகனங்களுக்கு தனி வழித்தடம். பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு தனி பார்க்கிங் வசதி உள்ளது.
அண்ணா சாலை வெளியே செல்லும் பகுதி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சிவானந்த சாலை, மெரினா நீச்சல் குளம், விக்டோரியா சாலை, எம்ஆர்டிஎஸ் பார்க்கிங் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.