Poonamallee Vadapalani Metro: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோயில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ நிர்வாகம் எடுத்து வருகிறது. சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை, விம்கோ நகர் - மீனம்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் நடந்து வருகிறது.
2ம் கட்ட மெட்ரோ பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்துவிட்டது.
இதனால், வடபழனி - பூந்தமல்லி ரயில் சேவை எப்போது துவங்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்கவே இல்லை. இந்த நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
14.6 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ஆம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார். இதனால், சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதற்கட்டமாக, பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும் என்றும், சேவைகளுக்காக சுமார் 15 ரயில்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனால், பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுமாக குறையும். குறிப்பாக, ஆற்காடு சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும். இந்த ரயில் பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, ஐயப்பன்தாங்கல், தெள்ளியரகம், போரூர் பைபாஸ், போரூர் சந்தி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வடபழனி போரூர் இடையே சாலிகிராமம், ஆலப்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு பெறாததால் அங்கு மெட்ரோ ரயில்கள் நிற்காது. இந்த ரயில்கள் காரிடார் 4ல் மஞ்சல் லைனில் இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் கட்டணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை தூரத்திற்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் இருக்கும் என கூறப்படுகிறது. கியூஆர் கோட், சிங்கார சென்னை அட்டை, ஸ்மார்ட் கார்டு, யுபிஐ உள்ளிட்டவை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் கிடைக்கும். காகித டிக்கெட்டுக்கு தள்ளுபடி கிடையாது.
இந்த வழித்தடம் பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட மேற்கு சென்னை பகுதிகளை வடபழனியுடன் இணைக்கிறது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஆற்காடு சாலையில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் , மெட்ரோ ரயில் சேவையின் முக்கிய Interchange Hub-ஆக, வடபழனி மேலும் முக்கியத்துவம் பெறும்.
தற்போது சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி செல்ல ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும் நிலையில், மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால் இந்த பயண நேரம் சுமார் 20 முதல் 25 நிமிடங்களாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடபழனி ஏற்கனவே மெட்ரோ முதல் கட்டப் பாதையில் செயல்படும் முக்கிய நிலையமாக உள்ளது.
இரண்டாம் கட்டப் பாதையும் வடபழனியுடன் இணைவதால், அங்கிருந்து மெட்ரோ ரயிலை மாற்றிப் பயணித்து விமான நிலையம், சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்வது எளிதாகும். போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இந்த புதிய மெட்ரோ பாதை பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.