புதிய தலைமைச் செயலகத்திற்கு குவியும் கண்டனங்கள்... அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்...?
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. திமுக, அதிமுக மட்டுமின்றி தவெக ஆட்சிக்கு ஆதரவளித்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கூட கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அரசியல் கட்சியினரின் நிலைப்பாட்டை அறிய இத்தொகுப்பில் காணலாம்.
Tamil Nadu New Secretariat: புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அடுத்தகட்ட பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சட்டப்பேரவை உடன் கூடிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சென்னையில் இடத்தை தேர்வு செய்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட துறைகள், அமைப்புகளுக்கு சொந்தமான இடத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1,200 கோடி மதிப்பில் 15 மாடிகள் கொண்ட புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட அனுமதி பெறும் நடவடிக்கைகளும் வேகம் எடுத்துள்ளன. இந்தச் சூழலில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
அதிமுக
- இத்திட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதி என இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
- மேலும் இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் இருந்த காலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர் என்றும் நினைவுக்கூர்ந்துள்ளனர்.
- விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இந்த நேரத்தில் கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி 1,200 கோடி ரூபாய் செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது என்றும் விமர்சித்துள்ளார்.
- புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை என்றும்; தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
- தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது என்றும்; எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்யை கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக
- தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில் புதிய தலைமைச் செயலகம் அமைவதை விமர்சித்துள்ளார்.
- அதில் அவர், "தற்போது இருக்கும் தலைமைச் செயலகத்தில் தவெகவினர் தங்களின் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும். அதன் பின்னர் புதிய சட்டப்பேரவை குறித்து யோசிக்கலாம்.
- தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென்று நினைத்தால், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டடத்தையே பயன்படுத்தலாம். தற்போது அது மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருந்தாலும் தலைமை செயலகத்திற்கு என கட்டப்பட்ட இடம் என்பதால் அதை மீண்டும் பயன்படுத்தலாம்" என குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு
திமுக, அதிமுக மட்டுமின்றி பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அதிலும் தவெக ஆட்சி அமைய ஆதரவளித்த சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரததை பாதிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "தலைமைச் செயலக கட்டுமானம் நீண்டநாட்களுக்கானது. அதனை அவசரகதியில் செய்யக்கூடாது. அனைவரும் ஏற்கக் கூடிய ஒரு இடத்தை தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்ய வேண்டும். ஒருமித்த கருத்தை எட்டும் வரை தற்போது தேர்வு செய்த இடத்தில் கட்டுமான பணி கூடாது. புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பட்டினப்பாக்கம் மீனவர்களின் கோரிக்கைகளை தவெக அரசு கேட்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
பாமக தலைவர் அன்புமணி X பதிவு
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் X பதிவு
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் X பதிவு
மேலும் படிக்க | சொந்த தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி?