கோவை மாவட்டம் காரமடையில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது அக்கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது விருப்பத்துக்கு இணங்க மறுத்ததால் சாதிப் பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசியதுடன், கட்சியிலிருந்து வெளியேறுமாறு மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் நிர்வாகி செய்தியாளர்களிடம் பேசுகையில், காரமடை ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சியின் செயலாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். தவெக தொடங்கிய காலத்திலிருந்தே கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகவும், கட்சியின் முதல் கூட்டத்தைக்கூட தானே ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு, காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியதாக அவர் கூறினார். கூட்டம் நிறைவடைய தாமதமானதால், வீட்டிற்கு செல்வதற்காக வாகன ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அப்போது கருப்பசாமி தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும் புகார் தெரிவித்தார்.
மேலும், தனக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தருவதாக கூறி அவர் தகாத முறையில் பேசியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னிடம் தவறாக பேசவோ, பழகவோ வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் அந்த பெண் நிர்வாகி தெரிவித்தார்.
இதற்கு பிறகும் பலமுறை தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக குற்றம்சாட்டிய அவர், கட்சியில் தனது இருப்பு இடையூறாக இருப்பதாக கூறி தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்திருப்பதால் தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறினார்.
தனது எதிர்ப்பை தொடர்ந்து சாதி பெயரை குறிப்பிட்டு அவமதித்ததுடன், பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்து மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களிடம் வேலை வாங்கிவிட்டு, அவர்களுக்கு பணம் வழங்காமல் புறக்கணிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தொகுதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளரிடம் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளதாகவும், அவர்களுக்கும் நடந்த சம்பவங்கள் குறித்து தெரியும் என்றும் அந்தப் பெண் நிர்வாகி கூறினார்.