SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

உப்பு சப்பே இல்லாத விஷயம்! தலைவனை குறை சொன்னது குத்தமா? விஜய் சேதுபதி பஞ்சாயத்து..

Vijay Sethupathi Controversy Explained : பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பின. அந்த சர்ச்சைகளுக்கு தற்போது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியே விளக்கம் அளித்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 15, 2026, 11:40 AM IST | Updated: Sep 15, 2026, 12:03 PM IST
Join

Vijay Sethupathi Controversy Explained : தமிழ்நாட்டின், முக்கியமான மற்றும் ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது, பிக்பாஸ். இதனை கமல் ஒரு காலத்தில் ஹோஸ்ட் செய்து வந்தார். இப்போது இதனை விஜய் சேதுபதி தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த மூன்று சீசன்களில், இவர் சொன்ன பல கருத்துகளை கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. ஆனால், இம்முறை மட்டும்தான், அது பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இம்முறை, சட்டமன்றம் போல பிக்பாஸ் வீடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹவுஸ்மேட்ஸ், ஆளும்கட்சி-எதிர்கட்சி என்று இரு அணிகளாக பிரிந்து சட்டமன்றம் போல இந்த வீட்டை வழிநடத்தி வருகின்றனர். இதில், வீட்டின் கேப்டனாக இருப்பவர்தான், தலைவராக இருக்கிறார்.

முதல் வாரத்தில் சாத்திகாதான் கேப்டனாக இருந்தார். வழக்கமாக பிக்பாஸில் வாரம் முழுவதும் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் பேச வேண்டிய விஷயங்களை விஜய் சேதுபதி வார இறுதியில் கேட்பார். இதற்கு, பிக்பாஸ் போட்டியாளர்கள் தகுந்த முறையில் பதில் அளிப்பார்கள். அப்படி, கடந்த வாரம் சாத்திகா கேப்டனாக இருந்த சாத்திகாவிடம் விஜய் சேதுபதி சில கேள்விகளை கேட்டார். அப்போது சாத்திகா எதிரணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இதையெல்லாம் கேட்ட விஜய் சேதுபதி, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், தலைமைத்துவம் என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தது போல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, பிரச்சனை என்று ஒன்று வரும் போது எதிரணி மீது பழியை தூக்கிப்போட்டுவிட்டு, தெரிச்சு ஓடுவது ஒரு தலைவருக்கான தகுதியே இல்லை” என்று பேசியிருந்தார். இது பெரும் அரசியல் விவாதங்களுள் ஒன்றாக தற்போது மாறி விட்டது.

மேலும் படிக்க | மூக்குத்தி அம்மன் 2 டீசர் வெளியீடு! சூர்யாவின் ‘சீன்’ படத்துடன் மோதும் நயன்தாரா..

கொந்தளித்த தொண்டர்கள்!

விஜய் சேதுபதி பேசிய இந்த விஷயம், இணையத்தில் மட்டுமன்றி அனைத்து இங்களிலும் கடுமையான விவாதங்களை கிளப்பியது. விஜய் சேதுபதியை வேறு ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்பு படுத்தி, அவர் இதனால்தான் இது போன்ற விஷயங்களை பேசியதாக கூறி வந்தனர். இன்னும் சிலர், அவர் மீது சில நாட்களுக்கு முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எடுத்து பேசினர். இன்னும் சிலர், பிக்பாஸ் ஷோவை ஒளிபரப்பும் நிகழ்ச்சி, விஜய் பற்றி பேசினால் தங்களின் ஷோவிற்கு டிஆர்பி எகிறும் என்று இப்படி பேசுவதாக கூறினர். இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே சென்று, பிக்பாஸ் ஷாேவை யாரும் பார்க்காமல் பாய்காட் செய்ய வேண்டும் என்றும் கூறி வந்தனர்.

சேனல் கொடுத்த விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் தொலைக்காட்சி, இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது.

“பிக் பாஸ் தமிழ் சீசன் 10 என்பது, அதற்கென நிறுவப்பட்ட வடிவம், கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டுச் சூழலின் கட்டமைப்பிற்குள் வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.

நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், வெளிப்பாடுகள் மற்றும் இடைவினைகள் ஆகியவை அதன் வளர்ந்து வரும் கதைக்களத்தின் ஒரு பகுதியாகும், மேலும் அவை நிகழ்ச்சியில் நிகழும் சூழலிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

நிகழ்ச்சியில் உள்ள எந்தவொரு குறிப்போ அல்லது வெளிப்பாடோ, நிகழ்ச்சியின் சூழலுக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, நிறுவனம், சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, அங்கீகரிப்பதாகவோ அல்லது கருத்துத் தெரிவிப்பதாகவோ கருதப்படக்கூடாது.

நிகழ்ச்சி மற்றும் அதன் நோக்கம் கொண்ட பொழுதுபோக்குச் சூழலுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விளக்கமோ அல்லது தொடர்போ நோக்கமோ அல்லது அங்கீகாரமோ செய்யப்படவில்லை” என்று கூறியிருக்கின்றனர்.

கமல் இருந்த போது நடந்த சம்பவங்கள்..!

நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசனின் முடிவிலேயே, தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். தான் இந்த ரியாலிட்டி ஷோவை எதற்காக தொகுத்து வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி தனக்கு ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் என்று, மக்களுடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாக கூறியிருந்தார். குறிப்பாக 2017ஆம் ஆண்டு சமயத்தில், அவர் வார்த்தையில் ஹெவியான அரசியல் வாடை மட்டும்தான் அடிக்கும். அப்போதிருந்த அதிமுக ஆட்சியின் ஊழல் மற்றும் அரசாளும் விதத்தை பல விதங்களில் இவர், நக்கலடித்து பேசியிருக்கிறார்.

நீட் விவகாரத்தின் அனிதாவின் மரணம், நீட்டினால் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கு மக்கள் குரல் கொடுக்காததன் விளைவு உள்ளிட்டவற்றை அவர் இந்த பிக்பாஸ் மேடையில் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலை குறிவைத்துதான் அவருடைய அத்தனை பேச்சுகளும் இருந்தது. இது பிரச்சாரமாக மக்களால் பார்க்கப்படவில்லை என்றாலும், அவர் கூற வருவது என்ன என்பதை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கமல்ஹாசன் பெரிதாக சர்ச்சையில் சிக்கியது, பிக்பாஸ் சீசன் 7ன் போது, போட்டியாளர் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பிய போதுதான். அப்போது கூட, சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

விஜய் பெயரையே குறிப்பிடவில்லை..!

விஜய் சேதுபதி, சர்ச்சைக்குரியதாக பேசியதாக குறிப்பிடப்படும் அவருடைய பேச்சில், அவர் ஒருமுறை கூட விஜய் என்றோ, தவெக என்றாே குறிப்பிடவில்லை. இருப்பினும், ஒரு சிலர் அவருக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டு அவரது போஸ்டரை செருப்பால் அடித்து தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தினர். ஒரு சிலர், விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூச்சலிட்டனர். கமல் அவ்வளவு பெரிய சம்பவம் எல்லாம் செய்யும் போது, அதற்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கோ, தொலைக்காட்சிக்கு விளக்கம் வை்க வேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது பெயரை கூட குறிப்பிடாத ஒரு விஷயத்திற்கு, அந்த தொலைக்காட்சி சேனலே இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க | பிக்பாஸ் 10 : முதல் எவிக்‌ஷன்! வெளியேறிய பெண் போட்டியாளர்-யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES