நாம் ஒரு டூர் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வோம்? எந்த ஊருக்கு அல்லது நாட்டிற்கு போக வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்திற்கு போவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்வோம், பின்பு, எங்கு செல்கிறோமோ அந்த இடத்தில் தங்குமிடத்தை ஏற்பாடு செய்வோம். பின்பு, 1 வாரம் அல்லது எத்தனை நாட்கள் அந்த வெக்கேஷனுக்கு செல்கிறோமோ, அதை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து விடுவோம். இங்கு ஒருவர், 1998ல் வீட்டை விட்டு கிளம்பி, 28 வருடங்கள் கழித்துதான் வீட்டிற்கே திரும்ப வந்திருக்கிறார். இவரது கதை என்ன என்பது குறித்து இங்கு கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?
இங்கிலாந்தை சேர்ந்த சாகச விரும்பியாக இருக்கிறார், கார்ல் புஷ்பி. இவர், தன்னுடைய 20களில் 1998ஆம் ஆண்டில் இருந்த போது, அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியிருக்கிறது. “நாம ஏன் வெறும் காலிலேயே நடந்து உலகை சுற்றி பார்க்க கூடாது..?” என்று. அதை யோசித்ததோடு விட்டாரா? செய்தே தீருவேன் என சபதமெடுத்து ஒரு நாள் வீட்டை விட்டும் கிளம்பி இருக்கிறார்.
கார்ல் புஷ்பிக்கு தற்போது 57 வயது ஆகி விட்டது. இவர், ஹல் எனும் இடத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட்டிருக்கிறார். அப்போது கிளம்பியவர், 2026ஆம் ஆண்டில்தான் தன்னுடைய தாயாரையே சந்தித்திருக்கிறார்.
29 வயதில் ராணுவத்திலிருந்து திரும்பிய புஷ்பிக்கு, எங்காவது போய் வருவோம் என்று தோன்றியிருக்கிறது. ஆரம்பத்தில் இவர் 12 வருடங்கள் போய் விட்டு, வீட்டிற்கு திரும்பி விடலாம் என்றுதான் நினைத்திருக்கிறார். ஆனால், வாழ்க்கை இவருக்கு வேறு திட்டத்தினை வகுத்து கொடுத்து விட்டது.
கிட்டத்தட்ட 29 நாடுகளை, புஷ்பி நடந்தே கடந்திருக்கிறார். அதாவது, இவர் நடந்த தூரம் மொத்தம் 36,000 மைல்களாம். தன் இலக்கை எட்டும் வரை, வீட்டிற்கு திரும்பி வரக்கூடாது, தன் இலக்கை முடித்தே ஆக வேண்டும், எந்த வாகனத்தையும் உபயோகிக்க கூடாது என்ற குறிக்கோளுடன் இருந்த புஷ்பி தற்போது அதை செய்தும் காட்டியிருக்கிறார்.
இவர், இந்த 28 ஆண்டுகளில் பாலைவனம், மலைகள், காடுகள், கடல் என பல்வேறு பகுதிகளை தாண்டியிருக்கிறார். இவரது பயணம் குறித்து செய்தியாளர்கள் இவரிடம் கேட்ட போது, “எனக்கு ரொம்ப போர் அடிச்சிதுங்க..” என்று ஜாலியாக பதில் கூறியிருக்கிறார், புஷ்பி.
புஷ்பு, 1998ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி, Punta Arenas Chile எனும் இடத்திலிருந்து தன் பயணத்தை தொடங்கியிருக்கிறார். தற்போது, தான் பயணத்தை தொடங்கிய அதே தேதியில் அதனை நிறைவும் செய்திருக்கிறார்.
தன் பயணத்தை முடிப்பதற்கு ஒரு மாதம் இருக்கும் போது, புஷ்பியை நோக்கி ஒரு ஆபத்து வந்திருக்கிறது. அலாஸ்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான Darien Gap எனும் பகுதியை கடக்கும் போது அவர் தன்னை துப்பாக்கி முனையில் வைத்து ஒருவர் மிரட்டியதாக கூறியிருக்கிறார். அதே போல, பனிக்கரடியை தன் பயணத்தில் கடந்து வந்ததாக கூறும் இவர், தன்னை உளவாளி என்று நினைத்து ஒரு முறை கைது செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதனால் ரஷ்யாவில் சில நாட்கள் சிறையில் இருந்து, தன்னை நாடு கடத்த உத்தரவிடப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் வீடு திரும்பிய புஷ்பிக்கு, ஹீரோவிற்கு அளிப்பது போல பலத்த வரவேற்பை உள்ளூர் வாசிகள் அளித்துள்ளனர். அவர் குயின் விக்டோரியா ஸ்குவையர் எனும் இடத்திற்கு வந்த போது, பலர் அவரை பார்க்கவும் அவருடன் கைக்கொடுக்கவும் ஓடி வந்ததாக கூறப்படுகிறது.
தான் ஊரில் இல்லாத காலத்தில், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் அவர், தனக்கு வீட்டிற்கு செல்ல வழியே தெரியவில்லை என்றும், அனைவரும் ஒரு இடத்தை நோக்கி கை காண்பித்த போது அதை வைத்தே வீட்டை கண்டுபிடித்ததாகவும் பேசியிருக்கிறார்.
இவர் தன்னுடன் ஒரு சில பொருட்களை மட்டுமே வைத்திருக்கிறார். பைகள், தலையில் பொருத்திக்கொள்ளும் டார்ச் லைட்டுகள், தேய்ந்து போன டயர்கள் உள்ளிட்டவைதான் அது.
இவரை பார்த்ததும், 75 வயதான இவருடைய தாயார் ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார். அதன் பின்னர், 36 வயதாகும் தன்னுடைய மகனையும், 12 வயதாகும் தன் பேத்தியையும் அவர் சந்தித்திருக்கிறார்.
புஷ்பி, தன் தாயாரை பார்த்ததும், இருவரும் கட்டித்தழுவி அழுதுள்ளனர். பின்பு, அவருடைய தாயார், “முன்னர் பார்த்ததை விட வித்தியாசமாக இருக்கிறாய்..உனக்கு வயதாகி விட்டதா..?” என்று நகைச்சுவையாக கேட்டிருக்கிறார். பின்பு குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட்ட புஷ்பி, மேடையேறி பேசியிருக்கிறார்.
தான் இவ்வளவு தூரம் கடப்பதற்கு தனக்கு யாரென்றே தெரியாதவர்கள் செய்த உதவிதான் காரணம் என்று கூறியிருக்கிறார். வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், தான் இந்த இடத்திற்கு வருவதற்கு உதவி செய்ததாகவும், தான் இதை தனியாக செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கார்ல் புஷ்பியின் பயணம், டாக்குமெண்ட்ரியாகவும் எடுக்கப்படுள்ளது. இதற்கு The Goliath Expedition என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவர் பயணத்தில் இருந்த போதே The Walk Around The World என்ற 44 நிமிட டாக்குமெண்ட்ரியும் வெளிவந்திருக்கிறது. தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறிய புஷ்பி, இனி வீட்டிலேயே ரெஸ்ட் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.