சிவகார்த்திகேயன் vs வெங்கட் பிரபு : ட்விட்டரில் மாறி மாறி ரிப்ளை..என்ன பிரச்சனை?
சமீபத்தில், இயக்குநர் வெங்கட் பிரபு, தான் சிவகார்த்திகேயனுடன் இணைய இருக்கும் திரைப்படம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதற்கு சிவகார்த்திகேயனும் ரிப்ளை செய்திருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
கோலிவுட்டில் ஜாலியான படங்களை எடுப்பதற்கு பெயர் போனவர் வெங்கட் பிரபு. இவரும் சிவகார்த்திகேயனும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற இருந்தனர். ஆனால், அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன்:
நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு, கடைசியாக விஜய்யை வைத்து தி கோட் படத்தை எடுத்திருந்தார். இதில், சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அந்த ரோலில் அவர் விஜய்யுடன் சிறிது நேரம் வருவது போன்ற கதாப்பாத்திரத்தில் வந்தார். “துப்பாக்கிய புடிங்க சிவா” என்ற இவர்களுக்குள்ளான அந்த காட்சி மக்களை கவர்ந்தது.
இந்த படத்திற்கு பிறகு அவர், வேறு ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பணியாற்ற இருந்தார். ஆனால், இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், “SK எனக்கு எப்போதும் ஒரு நெருங்கிய நண்பர் மற்றும் சகோதரர் போன்றவர்.
இது குறித்துப் பலவிதமான யூகங்களும் சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. ஒரு தந்தையாக, தனது சொந்த மகன் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படம் தாமதமாகும் போது ஏற்படும் விரக்தி இயல்பானதே. அவருக்கு முழு விவரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; அதற்காக நான் அவரைக் குறை சொல்ல முடியாது. எனது பணி என்று வரும்போது நான் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவன்; அவரிடம் கூட எனது தொழில்முறை விஷயங்களை விரிவாகப் பேசுவதில்லை.
மேலும் படிக்க | Explained : LGBTQ உறவை நார்மலைஸ் செய்வதா? டோரதி படம் சொல்ல வருவது என்ன?
பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டத்தைத் தொடங்க முடியாமல் போனது. அவ்வளவுதான்; இதில் எந்த மனக்கசப்பும் இல்லை. சரியான நேரம் அமைந்து, ஒரு நல்ல கதைக்களம் அமைந்தால், SK-வுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புவேன்.
எனவே, தயவுசெய்து இத்துடன் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நான் எனது அடுத்தடுத்த பணிகளில் மும்முரமாக இருக்கிறேன். என் சகோதரர் போன்றவரான சேயோனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் ரிப்ளை:
நடிகர் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவின் ட்வீட்டிற்கு ரிப்ளை செய்திருக்கிறார். அதில், "சார், நாம் ஒரு குடும்பம் போன்றவர்கள். இதற்கெல்லாம் நீங்கள் இவ்வளவு சீரியஸாகப் பதிலளித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார்; உங்கள் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். சார், இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன் - நான் எப்போதும் VP-யின் ரசிகராகவே இருப்பேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்" என்று கூறியிருக்கிறார்.
கங்கை அமரன் வீடியோ:
சமீபத்தில், வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளரும், நடிகருமான கங்கை அமரன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், வெங்கட் பிரபு குறித்து பேசிய போது அவர் ஒரு நடிகருடன் படத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்காக காத்துக்கொண்டிருந்ததாகவும், கதை ரெடி செய்து, அமெரிக்காவிற்கு சென்று அதற்கான சில வேலைகளை செய்து விட்டு திரும்பி வந்ததாகவும், அந்த ஹீரோவின் ஒரு படம் இந்த வருடத்தில் பெரிய ஹிட் ஆகிவிட்டது என்றவுடன், அந்த இயக்குநருடன் படம் செய்ய ஒத்துக்கொண்டு, வெங்கட் பிரபுவின் படத்தை தள்ளிப்போட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், வெங்கட் பிரபு நடிக்க வேண்டிய படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டு வேறு ஒருவர் படத்தில் நடிப்பதால், “இது உனக்கு தேவையா? இதுக்கு மேல அவன் கிட்ட கெஞ்சி அவரை உன் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமா? அது குடும்பத்துக்கு அவமானம் இல்லையா?” என்று கேட்டதாகவும் பேசினார். இதில் அவர் எந்த ஹீரோ என்கிற பெயரை அவர் கூறவில்லை என்றாலும் அது சிவகார்த்திகேயன்தான் என்று பலரும் கூறி வந்ததால், இந்த விளக்கத்தை வெங்கட் பிரபு கொடுக்க வேண்டியதாக போயிற்று.
மேலும் படிக்க | ஒரே நாளில் வெளியான டோரதி, மீசைய முறுக்கு 2, லெனின் பாண்டியன்..எது ஓகே?