விஜய் ஆண்டனி செருப்பு போடாமல் இருக்க காரணம்..மகளின் நினைவாக எடுத்த முடிவு..!
Vijay Antony : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, பல நாட்களாக காலில் செருப்பு போடாமல் இருக்கிறார். இதையடுத்து, அவர் ஏன் செருப்பு போடுவதில்லை என்று அவருடைய மனைவி விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Vijay Antony : நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ‘அப்பா குட்டி’ எனும் திரைப்படத்தில் நடத்திருக்கிறார். இந்த படத்தின் விழா சமீபத்தில் நடந்தது. அதில் விஜய் ஆண்டனியின் மனைவி பேசிய போது, தன் கணவர் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
விஜய் ஆண்டனியின் மகள்..
விஜய் ஆண்டனிக்கு இரு மகள்கள். மூத்த மகளின் பெயர், மீரா, இளைய மகளின் பெயர் லாரா. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, திடீரென அனைவரையும் பதற வைக்கும் செய்தி ஒன்று வெளியானது. 12ஆம் வகுப்பு படித்து வந்த மீரா, அவருடைய வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டதாக செய்திகள் வெளியானது. திரையுலகை சேர்ந்த பலரும் அந்த சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அந்த குழந்தையை தெரியாதவர்களுக்கும் அவருடைய இழப்பு மிகவும் பர்சனலாக இருந்தது.
தன் மகளின் இறப்பில் இருந்து மீண்டு வர, விஜய் ஆண்டனி கொஞ்சம் கெஞ்சம் கொஞ்சமாக அதிகம் பேருடன் உரையாட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இருந்தே தன்மையான மனிதராக இருந்த விஜய் ஆண்டனி, அதை விட மிகவும் தன்மையான மனிதராக மாறினார். எல்லோரும், எப்படி தன் மகள் இறந்த சோகத்தை கூட வெளியில் காட்டாமல் இவர் இருக்கிறார்? என்று ஆச்சரியப்பட்டனர்.
செருப்பு அணிவதை நிறுத்தினார்..
விஜய் ஆண்டனி, தன் மகள் இறந்த நாள் முதல் தான் செருப்பு அணிவதையே நிறுத்தினார். இது குறித்து முன்னர் கேள்வி கேட்ட போது, இப்படி காலணி அணியாமல் இருப்பதால் தனக்கு மன நிம்மதி கிடைப்பதாக கூறினார். கூடவே, “உங்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்தால், இப்படி செருப்பு போடாமல் சில நாட்கள் நடந்து பாருங்கள்” என்று தெரிவித்தார். இப்போது, இவர் செருப்பு போடாமல் இருப்பதற்கான உண்மையான காரணம் பற்றி அவருடைய மனைவியான பாத்திமா பேசி இருக்கிறார். அப்போது அவர் கூறியிருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தை கொடுத்துள்ளன.
மகளின் நினைவாக..
விஜய் ஆண்டனியின் மகள் மீரா, 12ஆம் வகுப்பு படிக்கும் போது உயிரிழந்தார். அவர், கல்லூரிக்கு போகும் போது அணிவதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட ஷூக்களை வாங்கி வைத்திருந்தாராம். ஆனால், அதை அணிவதற்குள் சென்று விட்டதாக தெரிவித்தார்.
மகள் இறந்த பிறகு, அந்த ஷூக்கள் அனைத்தும் வீட்டில்தான் இருக்கின்றன. இதனால் இனி தான் செருப்பு போடவே மாட்டேன் என விஜய் ஆண்டனி முடிவெடுத்து விட்டதாக அவருடைய மனைவி தெரிவித்திருக்கிறார்.
அப்பா குட்டி படம்..
அப்பா குட்டி திரைப்படம் குறித்து பேசிய விஜய் ஆண்டனி, இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என கூறினார். தொடர்ந்து, “இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார். அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
அப்பா-மகள் பாசம் குறித்த கதை..
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம் மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு ஆக்ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியுள்ளது. குடும்ப உணர்வுகளுடன் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே படத்தின் இரண்டாவது தோற்றப் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது ஃபைவ் ஸ்டார் செந்தில் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.