Pension Rule Change: ஓய்வூதியதாரர்கள் கவனிக்க வேண்டிய ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (Unified Pension Scheme - UPS) கீழ் வரும் பணியாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. DoPPW ஓய்வூதிய பங்களிப்பு தொடர்பான ஒரு அம்சத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
துறை சார்ந்த நடவடிக்கைகளின் காரணமாக ஒரு பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டால், அந்த இடைநீக்க காலத்தில் தனது ஓய்வூதிய நிதிக்குத் தொடர்ந்து பங்களிப்பு செய்வதா அல்லது நிறுத்துவதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்தப் பணியாளருக்கே உண்டு. இடைநீக்க காலத்தில் பணியாளர் தனது பங்களிப்பை நிறுத்த முடிவு செய்தால், அரசாங்கத்தின் பங்களிப்பும் உடனடியாக நிறுத்தப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) தெளிவுபடுத்தியுள்ளது.
அக்டோபர் 27, 2026 அன்று இது தொடர்பாக DoPPW ஒரு அதிகாரப்பூர்வ குறிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதன் படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் வரும் CCS விதிகள், 2025-ன் விதி 6(2)-ன் கீழ், இடைநீக்கத்தில் இருக்கும் பணியாளர்கள் தங்கள் ஓய்வூதிய பங்களிப்பைத் தொடரலாம் அல்லது நிறுத்தலாம். விதி 7(3)-ன் படி, இடைநீக்க காலத்தில் வழங்கப்படும் பிழைப்புப்படி (subsistence allowance) அடிப்படையில் பங்களிப்புகள் கணக்கிடப்படுகின்றன. ஒரு பணியாளர் தனது பங்களிப்பை நிறுத்தத் தேர்வுசெய்தால், அந்த காலத்திற்கு அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எந்த நிதியும் அவரது ஓய்வூதியக் கணக்கில் வரவு வைக்கப்படாது.
சில சமயங்களில், இடைநீக்கத்தைத் தொடர்ந்து நடைபெறும் துறை சார்ந்த விசாரணைகள் நீண்ட காலம் நீடிக்கலாம். இருப்பினும், இத்தகைய பணியாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விசாரணையின் முடிவில் அந்தப் பணியாளர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு, இடைநீக்க காலம் 'பணியில் இருந்த காலம்' (on duty) அல்லது 'ஊதியத்துடன் கூடிய விடுப்பு' (paid leave) என முறைப்படுத்தப்பட்டால், செலுத்தப்படாத முழு பங்களிப்புத் தொகையும் மறு கணக்கீடு செய்யப்படும்.
நெட் அசெட் வேல்யூ: இந்தச் செயல்பாட்டில், உண்மையில் செலுத்த வேண்டிய தொகைக்கும், இடைநீக்க காலத்தில் செலுத்தப்பட்ட தொகைக்கும் இடையிலான வித்தியாசம், இயல்புநிலை முதலீட்டு முறையின் நிகர சொத்து மதிப்பு (Net Asset Value - NAV) அடிப்படையில் கணக்கிடப்படும்.
நிலுவைத் தொகை சேர்க்கப்படும்: தொகை சரிசெய்தல் மேற்கொள்ளப்படும் மாதத்தின் கடைசி வேலை நாளில் இருந்த NAV மதிப்பிற்கு ஏற்ப யூனிட்டுகள் ஒதுக்கப்படும். மேலும், பணியாளர் மற்றும் அரசாங்கம் ஆகிய இரு தரப்பிலிருந்தும் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப்படும்.
கண்டிப்பான நிலைப்பாடு: இடைநீக்கத்தில் உள்ள பணியாளர்களுக்குத் தங்கள் பங்களிப்பு குறித்து முடிவெடுக்கும் நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டிருந்தாலும், தகுதிகாண் காலம் (probation period) தொடர்பாகத் துறை மிகவும் கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
பங்களிப்பு கட்டாயம்: விதி 6(6)-இன் கீழ், தகுதிகாண் காலத்தில் யுபிஎஸ் (UPS)-இல் பங்களிப்பு செய்வது கட்டாயமாகும். இதில் எந்த விலக்கோ அல்லது விலகிக்கொள்வதற்கான வாய்ப்போ அனுமதிக்கப்படாது.
அமைச்சகங்களும் துறைகளும், தங்களின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் UPS/NPS தொடர்பான பணிகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு, பணி இடைநீக்கம் (suspension) குறித்த விதிகளையும் அனுப்பி, அவற்றை "கடுமையாகச் செயல்படுத்த" அறிவுறுத்தியுள்ளன.
இந்த விளக்கங்கள் குறிப்பாக இளம் ஊழியர்களுக்கு மிக முக்கியமானவை. ஏனெனில், UPS நிதித் தொகுப்பு (corpus) மாதந்தோறும் பங்களிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. பணி இடைநீக்கக் காலத்தில் பங்களிப்புகள் செலுத்தப்படாமல் இடைவெளி ஏற்பட்டு, பிற்காலத்தில் விசாரணை முடிவின் மூலம் அது முறைப்படுத்தப்படாவிட்டால், அது ஓய்வூதிய நிதியில் நிரந்தரமான பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும்.