Explainer: நேபாள பேரிடருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்த அறிகுறி, பனிப்பாறை ஆய்வாளர் பகீர் ரிப்போர்ட்
Nepal Flood: நேபாள பேரழிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு நிலத்தின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததாக 'பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே' அமைப்பைச் சேர்ந்த பனிப்பாறை ஆய்வாளர் டாக்டர் ஹமிஷ் பிரிட்சார் கூறியுள்ளார்.
Nepal Flood: சென்ற வாரம் இயற்கை தனது சீற்றத்தை நேபாள நாட்டின் மீது மொத்தமாய் கொட்டித் தீர்த்தது. நீரும் நிலமும் ஒன்றோடொன்று சேர்ந்து மக்கள், மிருகங்கள், வீடுகள், சுரங்கங்கள், பாலங்கள் என பாரபட்சமில்லாமல் அனைத்தையும் கபளிகரம் செய்தன. இந்த பேரழிவை தடுத்திருக்க முடியுமா? தற்போது கசியும் சில தகவல்கள் அப்படி ஒரு சந்தேகத்தை கிளப்புகின்றன.
2 நாட்களுக்கு முன்னரே தெரிந்த அறிகுறிகள்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, இமயமலையில் ஒரு ஆபத்தான நிகழ்வு நடக்கவிருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் இருந்ததாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகமான வெப்பநிலை: நேபாள பேரழிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு நிலத்தின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததாக 'பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே' அமைப்பைச் சேர்ந்த பனிப்பாறை ஆய்வாளர் டாக்டர் ஹமிஷ் பிரிட்சார் கூறியுள்ளார்.
சூடான ஏரி: நேபாளத்தில் சீறிப்பாய்ந்த வெள்ளம் தன் பாதையில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்ற அந்த நாளில், இடிந்து விழுந்ததாகக் கருதப்படும் பனிப்பாறையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், 5,100 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ள ஒரு ஏரியின் வெப்பநிலை அந்த ஆண்டிலேயே மிக அதிகமாகப் பதிவாகியிருந்தது.
எனினும், நேபாளத்தில் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும், 4,000-க்கும் மேற்பட்டோர் மற்றும் திபெத்தில் 500 பேர் காணாமல் போகவும் காரணமான இந்த வெள்ளப்பெருக்கிற்கான துல்லியமான காரணத்தை காலநிலை நிபுணர்கள் கண்டறிய இன்னும் முயன்று வருகின்றனர்.
திடீர் வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?
பனிப்பாறை சரிவு
இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒரு பனிப்பாறை சரிந்து விழுந்ததால், சுமார் 4,000 அடி அளவிலான பனிக்கட்டிப் பகுதி பள்ளத்தாக்கில் மோதியதால் இந்த வெள்ளப்பெருகு ஏற்பட்டு இருக்கலாம் என்ற காரணம் பரவலாக உள்ளது.
"இந்த அதிக வெப்பநிலை பனிப்படலத்தை பலவீனப்படுத்தியிருக்கும்; பனிப்பாறையில் உள்ள பிளவுகளை நீரால் நிரப்பியிருக்கும்; மேலும் பனிப்பாறைகளை அந்தந்த இடங்களில் நிலைநிறுத்தியிருக்கும் பனி மற்றும் பாறைக்கு இடையிலான பிணைப்புகளை உருக்கியிருக்கும்," என்று பிரிட்சார்ட் 'டெய்லி மெயில்' இதழிடம் கூறினார்.
5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்ட மற்றொரு காரணம், ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆகும். இருப்பினும், லாங்டாங்-லிருங் மலையில் பனிப்பாறை சரிந்து விழுந்ததாலேயே நிலம் அதிர்ந்தது என்பதைப் பிந்தைய ஆய்வுகள் காட்டின.
பாறை மற்றும் வண்டல் மண்ணுடன் கலந்த பனி மலையிலிருந்து சரிந்து விழுந்து, லெண்டே கோலா (Lhende Khola) ஆற்றை தற்காலிகமாகத் தடுத்தது. இதனால் ஒரு பெரிய ஏரி தற்காலிகமாக உருவானது. பின்னர் அது உடைந்து வெளியேறியதால் அந்தப் பேரழிவு வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இயற்கை சீற்றத்தை அதிகரிக்கும் காலநிலை மாற்றம்
- காலநிலை மாற்றம் இத்தகைய நிகழ்வுகளின் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
- உலகின் பிற பகுதிகளை விட இமயமலைப் பகுதி மிக வேகமாக வெப்பமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- இப்பகுதியில் பெய்யும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவுகள் பொதுவாக நிகழும் பருவமழைக் காலத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளதை பிரிட்சார்ட் குறிப்பிட்டு காட்டினார்.
- இந்த காலத்தில் ஆறுகள் நிரம்பியிருந்ததையும், மண் அதிக ஈரப்பதத்துடன் இருந்ததையும் சுட்டிக்காட்டிய பிரிட்சார்ட், இவை இந்த பேரழிவிற்கான சூழலை உருவாக்கியதாக தெரிவித்தார்.
- இமயமலைப் பனிப்பாறைகள் வேகமாக உருகிப் பின்வாங்குவதற்குக் காரணமான காலநிலை மாற்றம் இந்தச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியது என்றும் அவர் கூறினார்.
அதிக ஆபத்தில் நேபாளம்
நேபாளம் இத்தகைய நிகழ்வுகளுக்கு அதிகம் ஆளாகக்கூடிய நிலையில் உள்ளது. அதற்கான காரணம் என்ன? முதலில், நேபாளத்தின் நிலப்பரப்பே ஒரு ஆபத்தான நிலப்பரப்பாக் உள்ளதாக பூகோள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். செங்குத்தான சரிவுகள் நிலச்சரிவுகள், பாறை சரிவுகள் மற்றும் பனிப்பாறைச் சரிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
உலகம் வெப்பமடைந்து வருவதால், இச்சூழ்நிலை மேலும் மோசமடையும். பனிப்பாறைகளை நிலைத்தன்மையுடன் வைத்திருக்கும் 'பெர்மாஃப்ராஸ்ட்' (ஆண்டு முழுவதும் உறைந்திருக்கும் நிலப்பகுதி) எனும் அடுக்கு, பருவநிலை மாற்றத்தால் உருகி வருகிறது. இதனால் பாறைகளும் சேறும் தளர்வடைந்து, இது போன்ற சரிவுகள் மேலும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
1976 முதல் 2024 வரையிலான செயற்கைக்கோள் தரவுகள், ஐஸ்லாந்தைத்தவிர பூமியின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் பனி உருகும் வேகம் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. குறிப்பாக, இமயமலைப் பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் பனி உருகும் வேகமானது, நீண்டகால சராசரியை விட 25 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது.
நாசா-இஸ்ரோவின் Nisar
நேபாள-திபெத் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவுக்கு முந்தைய வாரங்களில், நாசா-இஸ்ரோவின் செயற்கைத் துளை ரேடார் (நிசார்) மிஷனும், நிலத்தின் உருக்குலைவு குறித்த குறிப்பிடத்தக்க சான்றுகளைப் பதிவு செய்திருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகின் மிகவும் ஆபத்தான மலைப்பகுதிகள் சிலவற்றில், அடிக்கடி மேற்கொள்ளப்படும் ரேடார் கண்காணிப்பின் சாத்தியமான மதிப்பை நிசாரின் (Nisar) அவதானிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
மேலும் படிக்க | 1,643 மாணவர்களின் உயிரையும் காத்த ஆசிரியர்... நேபாளில் நடந்தது என்ன?