Madurai Crime News: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவருக்கு சத்தியா என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துச்செல்வம் என்ற ஆண் குழந்தை இருந்தது.
பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் தாய் சந்தியா, மகள்கள், மகன் முத்துச்செல்வம் ஆகியோருடன் வசித்து வந்தார்.
சிறுவன் முத்துச்செல்வம் தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் (அக். 24) விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகே பகல் 11 மணியளவில் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
மாலை வரை சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த சிறுவனின் தாயார் மற்றும் உறவினர்கள், கிராம பொதுமக்களுடன் சேர்ந்து காவல்துறை உதவியுடன் அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இன்றும் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று அதேபகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் முத்துச்செல்வம் மர்மமான முறையில், உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி ஹேமலதா காணாமல் போய் 15 நாட்களாகிவிட்ட நிலையில், இன்றும் அந்த வழக்கில் பெரியளவில் முன்னேற்றம் இல்லை. சிபிசிஐடி காவல்துறையினரும் அந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவரது X பக்கத்தில் தமிழ்நாட்டில் பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் படுகொலைகள் என்ற தலைப்பில் இன்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள் 🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. 🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். 🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. 🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. 🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள். 🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. 🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? 🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்! #LawAndOrder
— M.K.Stalin (@mkstalin) October 26, 2026
அதில் அவர், "சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. தவெக ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?" என தவெக ஆட்சியையும், முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக சாடி உள்ளார்.