இந்தியாவில் எந்த படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும், அதற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் அனுமதி பெற்று, அதற்குறிய சான்றிதழை பெற வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் Central Board Of Film Certification என்று குறிப்பிடுகிறோம். இவர்களது தளத்தில் நடந்த பாதுகாப்பு தரவு மீறல் (Data Breach) காரணமாக, 500க்கும் மேற்பட்ட படங்களின் தரவுகள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திலிருந்து, 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதைகள் மற்றும் ஆவணங்கள்தான் இணையத்தில் கசிந்துள்ளது. திரைப்படங்களுக்கான தணிக்கை அனுமதிக்கு, தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கும் இ-சினிப்ரமான் எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இந்த தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இப்படி கசியப்பட்ட படங்களின் முழு காப்பி இல்லை என்றாலும், அவை குறித்த மிகவும் ரகசியமான ஆவணங்கள், இப்படி கசியப்பட்ட தரவுகளில் மிகவும் ரகசியமான ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தரவுகளில், படங்களின் திரைக்கதைகள், கதாப்பாத்திர விவரங்கள், படத்தில் இருந்து எந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று, தணிக்கை வாரியத்தால் அளிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் மற்றும் திரையரங்கு வெளியீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிற முக்கிய ஆவணங்களும் அடங்கும்.
ஒரு படம் தயாராவது, அந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால், அப்படம் தொடர வேண்டும் என்றால், அதற்கு தயாரிப்பாளரிடம் இருந்து அதற்கேற்ற நிதி இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தகவல்கள், வெளியீட்டிற்கு முன்பே கசிவது, தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியிலான இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு வருங்காலத்தில் பல்வேறு படங்களை எடுப்பதில் சிக்கல் வரலாம்.
அதே சமயத்தில், இயக்குநர் அல்லது திரைக்கதை ஆசிரியருக்கும் இது பிரச்சனையாக முடியலாம். ஒருவர், திரைப்படத்திற்காக ஒரு கதையை எழுதி, அந்த கதை இணையத்தில் லீக் ஆகிவிட்டது எனும் பட்சத்தில், யார் வேண்டுமானலும் அந்த கதையை திருடலாம் எனும் அபாயம் உள்ளது. அதையும் தாண்டி, கதையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் ஒரு ஸ்கிரிப்ட் ஆக லீக் ஆகிவிட்டால், படம் வெளியாகும் போது அது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமலும் போகலாம்.
தற்போது திருடப்பட்டிருக்கும் தரவுகளில் இருக்கும் முக்கிய ஆவணங்கள், ‘இண்டர்நெட் ஆர்க்கைவ்’ எனும் இணையதளத்தில், யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் ஆப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, இண்டர்நெட் ஆர்கைவ் நிர்வாகம், உடனே தங்களுடைய தளத்திலிருந்து இந்த தகவல்களை முழுமையாக நீக்கியிருக்கிறது. தற்போது நடைப்பெற்றுள்ள இந்த சம்பவம், இணைய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனமே உறுதி படுத்தி இருக்கிறது.
தணிக்கை வாரியம், தரவு திருட்டு நடந்தவுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, தங்களுடைய இணையதளத்தில் முழுமையான பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டிருக்கிறது.
கசிந்த ஆவணங்களில், ஒவ்வொரு காட்சியின் விரிவான மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற விளக்கங்களுடன் கூடிய படப்பிடிப்புத் திரைக்கதைகளும் அடங்கும் என கூறப்படுகிறது. இந்தத் திரைக்கதைகள், தணிக்கை வாரியத்தின் இந்தத் திரைப்படங்களுக்கான மதிப்பாய்விற்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. ஒரு திரைக்கதையில், திரைப்படம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட தகாத வார்த்தைகளுக்கான லேபிள்களும், உரையாடல்கள் குறித்த பிற விளக்கங்களும் கூட இதில் இடம்பெற்றிருந்தன.
இப்படி கசியப்பட்ட தகவல்கள், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் உத்தரவிடப்பட்ட காட்சி வெட்டுக்களின் சுருக்கமும் அடங்கும். 1952 ஆம் ஆண்டு, சினிமாட்டோகிராஃப் சட்டத்தின் பிரிவு 5A(2)-வின் கீழ், இது எப்படியும் பொது தகவலாக இருக்க வேண்டுமாம். ஆனாலும், தணிக்கை வாரியம் இந்த தரவை அதன் இணையதளத்தில் “Under Maintenance" என்று குறிப்பிட்டிருக்கிறது.
லீக் ஆன ஆவணங்களிலேயே, மிகவும் முக்கியமானதாக கருதப்படும் ஆவணம் ஒன்று உள்ளது. இந்தியாவிற்கு விநியோகம் செய்யும் சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நாட்டின் மற்றொரு பகுதியில், மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகிய இரு தரப்பினரின் திரைப்பட விநியோக ஒப்பந்தங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இது போன்று, குறைந்தது 3 ஒப்பந்தங்களில், இந்தியாவில் விநியோகத்திற்காக ஒரு திரைப்படத்திற்கு உரிமம் பெற, செலுத்தப்பட்ட கட்டணம் குறித்த தகவல்கள் திருத்தப்படாமலோ, அல்லது முறையற்ற முறையில் திருத்தப்பட்டோ இருந்தன என கூறப்படுகிறது.
இது குறித்து பேசும் வல்லுநர் ஒருவர், திரைத்துறை சார்ந்த வணிக ஒப்பந்தங்களில் படைப்பு கட்டுப்பாடு, நடிகர் தேர்வு, ஊதியம், விளம்பரம், திரைப்படத்தின் கதைக்களம், தயாரிப்பு தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகள் போன்றவற்றை நிர்வகிக்கும், பேச்சுவார்த்தை தொடர்பான விதிகள் பெரும்பாலும் இதில் அடங்கியிருக்கும் என்கின்றனர்.
தொடர்ந்து, வணிகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பும் அதன் சார்ந்த விதிமுறைகளும், பொது வெளிக்கு வரும் போது, இந்த ஒப்பந்தங்களுக்கு அடிப்படையாக இருக்கும் ரகசியத்தன்மையை அது மீறப்படுகிறது. இப்படி ஒரு விஷயம் வெளிவரும் போது, அது அந்த படம் குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனால், அந்த கதைக்கும் படத்திற்கும் சம்பந்தப்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்படுவார்கள்.
இப்போது வரை, CBFCக்கு இந்த தரவுகளை திருடியவர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறாது. இருப்பினும், இது குறித்து தொடர்ந்து விசரித்து வருவவதாக மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் வாரியத்தின் தலைவர் சசி சேகர் வேம்பதி தெரிவித்திருக்கிறார்.