DMK Ex Minister Anbil Mahesh Arrest: தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார்.
கடந்த திமுக ஆட்சியில் (2021-2026) பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலையில் தள்ளுபடி செய்திருந்தது.
Chennai Police say they have arrested former Tamil Nadu School Education Minister and DMK leader Anbil Mahesh Poyyamozhi in connection with an alleged ₹100-crore private school approval scam. The case involves allegations that money was collected from private school managements by promising government approvals, permanent recognition and permission to upgrade schools.
— ANI (@ANI) October 26, 2026
இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அன்பில் மகேஷ் கைது செய்து, சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலையில் நீதிமன்றம் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தனது வழக்கறிஞரிடம் ஆலோசனை மேற்கொண்டு வந்துள்ளார் அன்பில் மகேஷ். அவரது வழக்கறிஞர் அலுவலகம் அமைந்தகரையில் உள்ளது.
முன்ஜாமீன் ரத்தானதை தொடர்ந்து போலீசார் சென்னையில் உள்ள அன்பில் மகேஷின் வீடுகளுக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அமைந்தகரை வழக்கறிஞர் அலுவலகத்தில் இருப்பதை அறிந்துகொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், அன்பில் மகேஷ் ஆலோசனையை முடித்து அலுவலகத்தின் வாசலுக்கு வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி அனுமதி, சிஎம்டிஏ அனுமதி போன்ற சட்டப்பூர்வ அனுமதிகளை வழங்குவதற்கு ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக பல்வேறு பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, திமுக செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார், இவர் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்த வழக்கில் இன்னும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
அண்மையில், இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர். சோதனையை தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்பி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அன்பில் மகேஷிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். செப். 18ஆம் தேதியில் 8 மணிநேரம் நடந்த விசாரணையில் அன்பில் மகேஷிடம் 240 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், அன்பில் மகேஷ் இதில் செய்தது நிதி பயங்கரவாதம் (Financial Terrorism) என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார். மேலும் இந்த வழக்கில் ரூ.100 கோடி என்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிந்ததுதான் என்றும் இதில் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டிருக்கலாம் என்றும் அரசு தரப்பு சந்தேகம் தெரிவித்தது.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முத்துகுமார் தலைமறைவாக இருப்பதாகவும், அவருக்கு அன்பில் மகேஷ் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
முத்துகுமாரும், அன்பில் மகேஷும் ஒன்றாக படித்தவர்கள் என்றும் இந்த வழக்கில் சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து அன்பில் மகேஷிடம் விசாரிக்க காவலில் வைத்து விசாரணை செய்வது அவசியம் என்றும் வாதிடப்பட்டது.
இந்த முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால் தற்போதைய சூழலில் முனஜாமீன் வழங்க முடியாது என்ற காவல்துறையின் வாதத்தை ஏற்று, அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2026 பொதுத்தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட அன்பில் மகேஷ் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.