Madurai Latest News Updates : மதுரையில் சின்ன வெங்காயம் விலை விண்ணை தொடர்ந்து வருகிறது. அனைவரும் தற்போது மகாராஷ்டிராவின் நாஷிக்கில் இருந்து மதுரை வரும் மத்திய அரசின் காண்டா எக்ஸ்பிரஸ் ரயிலைதான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனாலும், காண்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெரிய வெங்காயம் மட்டுமே வரும் என்பது கவனிக்கத்தக்கது. மதுரையில் சின்ன வெங்காயம் மொத்த விலையில் 80 ரூபாயாகவும், சில்லறை விலையில் 100 ரூபாயாகவும் விற்பனையாகி வருகின்றன. அதேநேரத்தில் பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 60 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட அருகாமை மாவட்டங்களில் விளைச்சலாகி வரும் சின்ன வெங்காயம்தான் மதுரை மாவட்டத்திற்கு பெரும்பாலும் வரும். நீர் பாசனத்தில் நிலவிய பிரச்னை, குறைவான விளைச்சல் உள்ளிட்டவை காரணமாக மதுரைக்கு வரத்து குறைந்து போனது.
மதுரையின் பரவை சந்தையில் சின்ன வெங்காயம் தினமும் 50 கிலோ மூட்டை 3,000 எண்ணிக்கையில் வரும். ஆனால் அது தற்போது 1,500 ஆக குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், கீழ மார்ட் வீதிக்கு வழக்கமாக 1,500 மூட்டைகள் வரும் நிலையில், தற்போது 1,000 ஆக குறைந்துளளது.
Times Of India செய்தி தளத்தின்படி, மாட்டுத்தாவணி மத்திய சந்தையின் வியாபாரி என்.டி. செல்லக்கண்ணு கூறுகையில், "ஜூலை மாதத்தில் கடைசி வாரத்தில் சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ ரூ.40-ரூ.60 ஆக விற்பனையானது. ஆனால் அது இப்போது படிப்படியாக உயர்ந்து ரூ.100 எட்டியுள்ளது" என்றார்.
மொத்த சந்தைகளில் சில்லறை விற்பனையாளர்களுக்கு போதுமான சரக்குகளை பெறுவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதே தொடர்ந்தால் சின்ன வெங்காயம் விலை மேலும் உயரலாம் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
சின்ன வெங்காயம் மட்டுமின்றி பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. ஜூலை மாதத்தில் கிலோவுக்கு ரூ.35- ரூ.40 ஆக விற்பனையாகி வந்த பெரிய வெங்காயம், தற்போது ரூ. 60 ஆக எட்டியுள்ளது. நாசிக்கில் இருந்து பெரிய வெங்காயத்தின் சரக்கு வரும்பட்சத்தில் விலை சற்று குறையும் என கூறப்படுகிறது.
சரக்கு அனுப்புவதற்காக சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம், கௌகாத்தி ஆகிய இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டு காண்டா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வருகிறது. நாசிக்கில் மத்திய அரசின் கூடுதல் இருப்பில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்சம் 200 டன்கள பெரிய வெங்காயம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இறுதி ஒதுக்கீடு மற்றும் சரக்குகள் வந்து சேரும் நாள் ஆகியவை இன்னும் உயரவில்லை என்று தெற்கு ரயில்வே தரப்பில் மூத்த அதிகாரி தெரிவித்ததாக Times Of India செய்தி வெளியிட்டுள்ளது.