Madurai Traffic Diversion: நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலும் மதுரை மாநகரில் இடையூறின்றி இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தவும் 05.11.2026 முதல் 08.11.2026 வரை மாநகர் கடை வீதிகளில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லக்கூடும் என்பதால் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்குரிய கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 5ஆம் தேதியன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, நான்குமாசி வீதிகள் மற்றும் நான்கு ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மேலும் பைபாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடிரோடு, கே.கே. நகர் 80 அடிரோடு. அழகர்கோவில் சாலையில் மூன்றுமாவடி சந்திப்பு புதுநத்தம் ரோடு அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு கூடல்நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருத்துவமனை சந்திப்பு ஆகிய சந்திப்புகளிலிருந்து நகருக்குள் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. மேற்படி சந்திப்புகள் வழியாக இரவு 11.00 மணிமுதல் மறுநாள் (06.11.2026) காலை 06.00 மணி வரை மட்டுமே வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
06.11.2026 மற்றும் 07.11.2026 ஆகிய தேதிகளில் பகல் மற்றும் இரவு முழுவதும் மதுரை நகருக்குள் மேற்படி சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. 06.11.2026 மற்றும் 07.11.2026 ஆகிய தேதிகளில் பொதுமக்களின் நலன் கருதி நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, தெற்குமாசிவீதி, கீழமாசிவீதி, மேல ஆவணி மூல வீதி, கீழ ஆவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதி ஆகிய வீதிகளில் இருசக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தேவைப்படும் பட்சத்தில் இருசக்கர வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படும். மேலும், பேலஸ் ரோடு, கீழமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எந்த வகையான வாகனங்களும் நிறுத்தம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரகனூர் பகுதி, காமராஜர் சாலையிலிருந்து வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சௌராஷ்ட்ரா மேல்நிலை பள்ளியிலும், கீழவெளிவீதி, தெற்குமாரட்வீதி, தெற்குவெளி வீதியிலிருந்து வரும் வாகனங்கள் சிந்தாமணி ரோடு தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பைபாஸ் ரோடு, கென்னட் ரோடு மற்றும் எல்லீஸ் நகர் பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை 70 அடி ரோட்டில் உள்ள எல்லிஸ்நகர் ஸ்ரீமீனாட்சி வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. திருப்பரங்குன்றம் பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காளவாசல், மேலவெளி வீதியிலிருந்து வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை இரயில்வே வாகன காப்பகம் மற்றும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. நத்தம் சாலை மற்றும் அழகர்கோவில் சாலையிலிருந்து கோகலே ரோட்டில் உள்ள வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை புது நத்தம் சாலை YWCA பள்ளி மைதானத்தில் நிறுத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், மேற்கண்ட வாகன நிறுத்துமிடங்களை இணைக்கும் வகையில், அதற்கென்று நகரப்பேருந்துகள் அடிக்கடி வெளி வீதிகளில் பயணம் செய்யும் வகையில் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாநகர காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்தம் மற்றும் தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வியாபாரப்பெருமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் வியாபார சங்க பிரமுகர்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.