Madurai Crime News Updates: மதுரையில் நேற்று (செப்டம்பர் 19) ஒரே நாளில் மூன்று படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமுகூர் பகுதியை அடுத்த பெருங்குடியில் நிலம் தொடர்பான தகராறு காரணமாக 48 வயதான அன்னமயில் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அன்னமயிலுக்கும் அவரது சகோதரரின் மகன் ராஜ்குமாருக்கும் இடையே தகராறு இருந்ததாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
வாக்குவாதத்தின்போது, ராஜ்குமார் கூர்மையான ஆயுதத்தால் அன்னமயிலின் தலையில் பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்கு பிறகு ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஒத்தக்கடை காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் நேற்று அதிகாலையில் மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் 27 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் வெள்ளனாதன்பட்டியைச் சேர்ந்த செல்லதுரை ஆவார். அவரின் தலையின் பின்புறத்தில் பலமாக தாக்கி காயம் ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்றாவது சம்பவமாக, நேற்று ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு அருகே ஆயுதமேந்திய கும்பலால் துரத்திச் செல்லப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட 50 வயதுடைய ஒருவரும் அடங்குவார்.
சோலை அழகுபுரம், சப்பானி கோவில் தெருவை சேர்ந்த சப்பாணி சரவணன் என்ற அந்த நபர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சரவணன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சோலை அழகுபுரம் பிரதான சாலையில் உள்ள ஒரு தேநீர்கடைக்கு வழக்கமாகச் சென்று வருபவர். அந்த கும்பல் அவரது நடமாட்டத்தை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சனிக்கிழமையன்று அதிகாலையில் கூர்மையான ஆயுதங்களுடன் ஐந்து பேர் கொண்ட கும்பல் சரவணனை தாக்கியிருக்கிறது. அவர் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றபோது, அந்த கும்பல் சாலையிலேயே துரத்திச் சென்று அவரை சரமாரியாக வெட்டியும் குத்தியும் அங்கேயே கொன்றதாக காவல்துறையினர் கூறினர்.
ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள பரபரப்பான சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து ஆதாரங்களைச் சேகரித்த அவர்கள், குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.