SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது..100 ஆண்டுகால வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்..!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருப்பது குறித்து தற்போது ஊரே பேசி வருகிறது. இதையடுத்து, இந்த பிரச்சனைக்கு பின்னால் இருக்கும் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 28, 2026, 18:59 IST | Updated: Nov 28, 2026, 19:08 IST
Image Credit: Tiruparangundram Issue Explained | X Page
Join

திருப்பரங்குன்றம் சர்ச்சை, கடந்த சில நாட்களில், இந்தியாவையே குறிப்பாக ஒட்டுமொத்த இந்து அமைப்பினரையும் தமிழ்நாட்டின் பக்கம் திருப்பி விட்டது. இந்த சர்ச்சை குறித்தும், தீபம் ஏற்றியது குறித்தும், இதன் பின்னால் இருக்கும் வரலாறு குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.

திருப்பரங்குன்றம் சர்ச்சை..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை, தமிழ்நாட்டின் அரசியலை தாண்டி, மதம், நீதித்துறை உள்ளிட்ட மூன்றும் சந்திக்கும் சங்கமத்தை உருவாக்கி விட்டது. இதை சற்று கூர்ந்து நோக்கும் போதுதான், முருகன், வழிபாடு இதையெல்லாம் தாண்டி இதில் இருக்கும் அரசியல் குறித்து நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

திருப்பரங்குன்றம் விவகாரம், இன்று நேற்று உருவானது அல்ல, 1920ஆம் ஆண்டே உருவானதுதான். அந்த ஆண்டில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேவஸ்தானம் மலையின் உரிமை தொடர்பாக, மதுரை நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, 1923ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், மலையின் பெரும்பகுதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானது என்றும், தர்கா உள்ளிட்ட சில குறிப்பிட்ட பகுதிகள் முஸ்லிம் தரப்பின் உடைமையில் இருப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | 15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்

இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றம் வழியாக பிரிவி கவுன்சிலுக்கும் சென்றது. 1931ஆம் ஆண்டு, தீர்ப்பில் சொத்துரிமை தொடர்பான உக்கிய அம்சங்களும் உருதிப்படுத்தப்பட்டன.

இருப்பினும், இந்த தீர்ப்புகளை மலை முழுவதும் ஒரே தரப்புக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணமாகவோ, மலையுச்சியில் தீபம் ஏற்றுவதற்கான இறுதி அனுமதியாகவோ சித்தரிப்பது தவறு என்பது இது குறித்து பேசும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

சொத்துரிமை தொடர்பான தீர்ப்பிற்கும், குறிப்பிட்ட இடத்தில் வழிபாடு நடத்துவதற்கான உரிமைக்கும் சட்டரீதியான வேறுபாடுகள் உள்ளன. 1862, 1912 ஆகிய ஆண்டுகளில், மலையின் மேற்கு பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான முயற்சிகள் எதிர்க்கப்பட்டதாக பின்னர் நடைப்பெற்ற வழக்குகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இருப்பினும், அந்த நிகழ்வுகளுக்கும் தற்போதைய தீபத்தூணுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்த தெளிவான ஆவணங்களும் தேவையானதாக இருக்கின்றன.

1950களில் நடந்தது என்ன..?

1958ஆம் ஆண்டு, தர்காவிற்கு வருபவர்களுக்கான மண்டபம் அமைப்பதற்காக மலையின் பாறைகள் வெட்டப்பட்டதாக கூறி, தேவஸ்தானம் தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, நில எல்லைகள், பாதை உரிமைகள், நில அள்வீடுகள் தொடர்பாகவும், 1960 முதல் 1965 வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் நடைப்பெற்றன. 1975ஆம் ஆண்டு, தடுப்பணை அமைப்பது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால், இது 1978ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், 1980ஆம் ஆண்டு, மேல்முறையீட்டில், புதிய வழக்குத்தொடர அனுமதி வழங்கப்பட்டது. இவை அனைத்தும், மலையின் உரிமை மற்றும் நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகளில் நீண்டகாலமாக தொடர்ந்து இருந்து கொண்டிருந்தன.

முக்கிய திருப்பம்..!

திருப்பரங்குன்றம் வரலாற்றில், 1994ஆம் ஆண்டு, முக்கிய திருப்பம் ஒன்று அமைந்தது. அதில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடம் தொடர்பான பிரச்சனையை, நேரடியாக நீதிமன்றம் கவனித்து வந்தது. 1996அம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம், வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், மாற்று இடத்தை தேவஸ்தானம் பரிசீலிக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தர்கா படிகட்டு பகுதி, நெல்லித்தோப்பு ஆகியவற்றிலிருந்து குறைந்தது, 15 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் எனும் நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டு வந்த தீபம்..!

மேற்கூறிய தீர்ப்பின் அடிப்படையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இதையடுத்து, மலையுச்சியில் தீபம் ஏற்றுவது மட்டுமே, பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் மரபு என்பதை நிரூபிக்கும் சாட்சியங்கள் எதுவும் இல்லை. எனவே, இந்த விஷயத்தை ஆவணங்களின் அடிப்படையில் ஆராய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

2000ஆம் ஆண்டிலும் கூட, மலைப்பகுதியில் மின்சார வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக நிர்வாக பிரச்சனைகள் எழுந்தது. 2011ல், கொடிமரம் அமைப்பது தொடர்பான சர்ச்சை எழுந்தது, 2021, இரும்புக்குழாய் நிறுவப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

தீபதூண் முக்கியம் பெற்றது ஏன்..?

இப்படி எத்தனையோ சர்ச்சைகளை கடந்து வந்த திருப்பரங்குன்றம், தீபத்தூணில் மட்டும் ஏன் இத்தனை கவனம் பெற்றது..? என்ற கேள்விக்கு பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது. 2024ஆம் ஆண்டு, விலங்கு பலி சர்ச்சைக்கு பின்னர்தான், தீபத்தூண் விவகாரம் மீண்டும் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக மாறியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் வழக்கமான இடத்தில் தீபத்துடன் கூடுதலாக மலை உச்சியிலுள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தடையுத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தனி அமர்வு வைத்து, இந்த உத்தரவை உறுதிப்படுத்தியபோதும், அந்த தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இப்போது நடந்தது என்ன?

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு மற்றும் அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்திருந்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நவம்பர் 20-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல், வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மீறியிருப்பதாக முதற்கட்டமாகக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தின் நிர்வாகச் செயல்பாடுகள், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நிர்வாகக் குழப்பம் நிலவுவதாகக் கடுமையாக விமர்சித்தனர்.

நீதிமன்ற உத்தரவு என்பது பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அல்ல என்றும், அனைத்து அதிகாரிகளும் அதனைச் செயல்படுத்தக் கடமைப்பட்டவர்கள் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, நவம்பர் 28-ம் தேதியான இன்று தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துச் சென்று தூணில் ஏற்ற வேண்டும் என்றும், அந்தத் தீபம் அணைந்திருந்தால் மாற்று ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இன்று முதன்முறையாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை இந்து அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது..! 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக இந்து அமைப்பினர் மகிழ்ச்சி..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES