திருப்பரங்குன்றம் விவகாரம்: அடுத்த பிளான்... விரைவில் அறிவிப்போம் - அமைச்சர் சி.டி.ஆர்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலையோ அல்லது நாளை காலையிலோ அறிவிப்பு வரும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மதுரையில் தெரிவித்துள்ளார்.
Thiruparankundram Latest News Updates: மதுரையில் சட்டத்துறை அமைச்சரும், திருப்பரங்குன்றம் தவெக எம்எல்ஏவுமான சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் தினத்தன்று மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் தமிழ்நாடு அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், "அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். சீராய்வு மனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை ஆகும், எனவே ஆலோசித்து இன்று மாலையோ அல்லது நாளை காலையோ அறிவிப்பு வெளியிடுவோம்" என்றார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரம்
மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க 6 வாரக் காலம் அவகாசம் வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபம் திருநாள் அன்று ஒரு முறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்துடன் சேர்த்து, தர்கா அருகே உள்ள தூணிலும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும்தான் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோஷங்களை எழுப்பவும், கும்பல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் CISF படையினரை பாதுகாப்புக்கு கொண்டுவரும் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட வலதுசாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், திமுக, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன.
முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்றைய (நவ. 20) பதிவில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்" என முதலமைச்சர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்
திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும் போது விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும் என்றும் அதற்கு திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதிடுவதற்கு அமர்த்திட வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தவெக அரசை வலியுறுத்தி இருந்தார்.
மேலும் படிக்க | மலைக்கோவிலில் மங்கள நிகழ்வு.. திருப்பரங்குன்றத்தில் தீபத் திருவிழா