Thiruparankundram Deepathoon Case: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) விசாரணைக்கு வந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை மட்டும் இடைக்கால அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 20ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், நவம்பர் 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் இன்று நண்பல் 12 மணி முதலே விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முக்கிய உத்தரவுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விதித்துள்ளனர். அதாவது, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி விபுல் பாஞ்சேலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், தமிழக டிஜிபி, அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் வரும் டிசம்பர் 15-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் "நிர்வாகச் சீர்கேடு" நிலவுவதாகத் தெரிகிறது என்றும், நிர்வாக அதிகாரிகள் தங்களின் அரசியல் தலைவர்களின் ஆணைகளுக்கு ஏற்பச் செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வழக்கில் நீதிபதிகள் கூறுகையில், நவம்பர் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தாமல் இருந்தது தங்களுக்கு கடுமையான வேதனையை கொடுக்கிறது. இது போன்ற தருணங்களில் நாங்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம். இத்தகைய சூழல்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது; இல்லையெனில், அது அரசியலமைப்புச் சார்ந்த குழப்பத்திற்கு வழிவகுக்கும். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும், நீதித்துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது என்ற செய்தியையே இந்த உத்தரவின் மூலம் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்த நீதிமன்றத்தின் உத்தரவு என்பது பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அல்ல; அது மாநில அரசையும், அதன் அதிகாரிகளையும், மாநிலச் சட்டத்தின் கீழ் செயல்படும் ஒவ்வொரு சட்டபூர்வ அல்லது மத நிறுவனத்தையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் மதுரையில் ஒரு நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிர்வாகத்தை ல் கையாளும் அதிகாரிகளின் செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் முதலை கண்ணீரை வடித்துள்ளார்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தவெக அரசை கடும் வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளனர்.