அர்னாப் புயல் எப்போது, எங்கு கரையை கடக்கும்? தமிழ்நாட்டில் என்ன தாக்கம் இருக்கும்?
Cyclone Arnab Latest Updates: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகத் தீவிர அர்னாப் புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு உருவாக்கி உள்ளது.
Cyclone Arnab Latest Updates: மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று (அக். 24) மாலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)தெரிவித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு- தென்கிழக்கு பகுதியில் சுமார் 820 கி.மீ., தூரத்திலும்; காக்கிநாடாவிற்கு கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் சுமார் 910 கி.மீ., தூரத்திலும்; மச்சிலிப்பட்டினத்திற்கு கிழக்கே 1,020 கி.மீ., தூரத்திலும்; பாபட்லாவிற்கு கிழக்கே 1,100 கி.மீ., தொலைவிலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மிகத் தீவிர புயலாக வலுப்பெறும்
அந்த வகையில், இது இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் (அக். 26) புயலாக மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்
இந்த புயலுக்கு 'அர்னாப்' என வங்கதேசம் பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இது வரும் அக். 27ஆம் தேதி காலையில் தீவிரப் புயலாக வலுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரப் புயலாக வலுப்பெற்றதற்கு பிறகு அதன் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டு மேற்கு-வடமேர்கு திசையில் இருந்து மாறி, வடக்கு நோக்கி, வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மிகத் தீவிரப் புயல் என்ற நிலையை எட்டும்.
அர்னாப் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்?
மிகத் தீவிரப் புயலாக வலுவடைந்ததற்குப் பிறகு ஆந்திராவின் கடலோர பகுதிகளை நோக்கி அக். 28ஆம் தேதி வாக்கில் நெருங்கும் எனவும், அன்றைய தினம் புயல் கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் புயல் கரையை கடக்கக்கூடிய நேரங்களில் அதன் காற்றின் வேகம் என்பது மணிக்கு 115 கிலோமீட்டர் முதல் 125 கிலோமட்டர் வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புயலின் தாக்கம் இருக்குமா?
புயலின் தென் பகுதியில் இருக்கும் தமிழ்நாட்டில், புயல் கரையை கடக்கும்போது, வட தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு பெரியளவில் தாக்கம் இல்லாவிட்டாலும், கடலோர பகுதியில் வசிப்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படும்.
அதே சூழலில் தமிழ்நாட்டில் மழைக்கான சூழலையும் இது மாறுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக வலுப்பெறும் அக். 26ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலுக்கு முந்தைய எச்சரிக்கை
தற்போதைய சூழலில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயலுக்கு முந்தைய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு மற்றும் தீவிரத்தை வானிலை ஆய்வு மையம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மதுரைக்கு ரெட் அலர்ட்... அவசர உதவி எண் அறிவிப்பு