கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!
கார்டெலியா குரூஸ் நிறுவனத்தின் இரண்டாவது சொகுசு கப்பலான ‘கார்டெலியா ஸ்கை’ மும்பை வந்தடைந்துள்ள நிலையில், 2,404 பயணிகள் பயணிக்கும் வசதிகளுடன் இந்திய குரூஸ் சுற்றுலாத் துறையில் புதிய விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் குரூஸ் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்தும் முயற்சியில் புதிய முன்னேற்றமாக, கார்டெலியா குரூஸ் நிறுவனத்தின் இரண்டாவது சொகுசு கப்பலான ‘கார்டெலியா ஸ்கை’ மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலின் வருகையால் பயணிகளுக்கான குரூஸ் பயணத் தேர்வுகள் அதிகரிப்பதுடன், இந்தியாவில் கடல் வழி சுற்றுலாவுக்கும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தனது சேவைகளை தொடங்கி சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு, கார்டெலியா குரூஸ் நிறுவனம் இரண்டாவது கப்பலை சேவையில் இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு ’கார்டெலியா எம்பிரஸ்’ கப்பல் மூலம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பயணத்தை தொடங்கியது. தற்போது புதிய கப்பலின் வருகை, நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான அடுத்தக்கட்ட முயற்சியாக அமைந்துள்ளது.
2,400க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம்
நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ‘கார்டெலியா ஸ்கை’ கப்பலில் ஒரே நேரத்தில் சுமார் 2,404 பயணிகள் பயணிக்க முடியும். மொத்தம் 12 தளங்களை கொண்ட இந்த கப்பல், சுமார் 848 அடி நீளம் உடையது. இதன் மொத்த கொள்ளளவு 77,104 கிராஸ் டன்னாகும்.
பயணிகளின் உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கப்பலில் 10 உணவு வழங்கும் இடங்களும், 11 பார்கள் மற்றும் ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய பிராந்திய உணவுகள் மட்டுமின்றி, இத்தாலிய மற்றும் ஜப்பானிய உணவு வகைகளும் கிடைக்கும். பஃபே உணவகம், கஃபே உள்ளிட்ட வசதிகளுடன் கடல் காட்சிகளை ரசித்தபடி உணவருந்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
ஸ்விம்மிங் ஃபூல் முதல் தியேட்டர் வரை
பயணத்தின்போது பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘கார்டெலியா ஸ்கை’ கப்பலில் இரண்டு ஸ்விம்மிங் ஃபூல், 5 ஹாட் டப்கள் மற்றும் 30,000 சதுர அடிக்கும் அதிகமான திறந்த தளப் பரப்பளவு இடம்பெற்றுள்ளது.
நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை காண்பதற்காக 930 இருக்கைகள் கொண்ட மார்கீ திரையரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர விளையாட்டு மைதானம், பிக்கிள்பால் விளையாட்டு வசதி, உடற்பயிற்சி கூடம், ஸ்பா, சலூன் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் ஆகியவையும் உள்ளன. குழந்தைகளுக்கென தனிப்பட்ட பொழுதுபோக்கு இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தங்குமிட வசதிகளை பொறுத்தவரை, சொகுசு அறைகள், மினி சூட்கள், கடல் காட்சியை காணக்கூடிய அறைகள் மற்றும் உட்புற அறைகள் எனப் பல்வேறு தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் வெவ்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களை கொண்ட பயணிகள் தங்களுக்கு ஏற்ற அறைகளை தேரு செய்ய முடியும்.
கார்டெலியா குரூஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய தாய் நிறுவனமான ‘வாட்டர்வேஸ் லீஷர் டூரிசம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிதிநிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில், இந்நிறுவனம் ரூ.8.9 கோடி மொத்த நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி ரூ.58.5 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
அதேபோல், நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு ரூ.101.5 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.132.9 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சுமார் 31 சதவீத வளர்ச்சியாகும்.
புதிய கப்பலின் வருகை, பயணிகளுக்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் குரூஸ் சுற்றுலா மீதான ஆர்வம் அதிகரிக்கும் சூழலில், கார்டெலியா குரூஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில் ‘கார்டெலியா ஸ்கை’ முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.